இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றிய தங்கமகன்!

டோக்கியோவில் நடைப்பெற்ற ஒலிம்பிக் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றி வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இந்தியத் தரைப்படையின் இளநிலை அதிகாரியான நீரஜ் சோப்ரா, இளையோருக்கான உலக வாகைத் தடகளப் போட்டிகளில் வெற்றியடைந்த முதலாவது இந்திய வீரரும், ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியரும் ஆவார்.

2016 ஆம் ஆண்டில் 20 வயதிற்குக் குறைவானோருக்கான உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தினார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கான கொடி ஏந்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது அவரது முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும்.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 88.06 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார். 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில் 87.58 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் பதக்கம் வென்று இந்தியாவின் கௌரவத்தைக் காப்பாற்றியுள்ளார்.

இதன் மூலம் ஒலிம்பிக் அறிமுகத்தில் தங்கம் வென்ற முதலாவது இந்திய வீரர்; ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மிக இளைய இந்திய வீரர் ஆகிய பெருமைகளைப் இவர் பெற்றுள்ளார்.

நீரஜ் சோப்ரா ஹரியானா, பானிபட் மாவட்டத்தில் கந்த்ரா கிராமத்தில் 24.12.1997-ல் பிறந்தார். நீரஜ் சோப்ரா குடும்பம் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட குடும்பம்.

தனது 12 வயதில் நீரஜ் சோப்ரா உடல் பருமனாக இருந்தார். இவரது உடல் எடையைப் பற்றி கவலைப்பட்ட நீரஜ் சோப்ராவின் தந்தை; வரை மட்லாடாவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் சேர்த்தார்.

நீரஜ் சோப்ரா ஒவ்வொரு நாளும் 24 கிலோ மீட்டருக்கு சைக்கிளில் செல்ல வேண்டியிருந்தது. மட்லாடா உடற்பயிற்சி கூடத்தின் இளைய உறுப்பினரான நீரஜ் சோப்ரா; அதன் பிறகு பானிபட்டில் உள்ள ஜிம்மில் சேர்க்கப்பட்டார். அங்கு இருந்தபோது அருகில் உள்ள பானிபட் விளையாட்டு ஆணையத்தின் மையத்திற்கும் இவர் அடிக்கடி சென்றார்.

அங்கு ஜல்லிக்கட்டு வீரர் ஜெயவீர் சௌத்ரி என்பவரின் அறிமுகம் கிடைத்தது; நீரஜ் சோப்ராவின் ஆர்வத்தைக் கண்டு அவர் வியந்தார். பயிற்சியின்றி ஈட்டி எறிதலில் 40 மீட்டர் தூரத்தை நீரஜ் சோப்ரா எட்டுவதைக் கவனித்து; நீரஜ் சோப்ராவின் திறமையை அவர் அங்கீகரித்து, அவருக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

அன்று திறமை என்னும் மண்ணில் சிறு விதையாக புதைக்கபட்ட நீரஜ் சோப்ரா; இன்று உலகமே வியந்துப் பார்க்கும் மாபெரும் விருச்சகமாக பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறார்.

இந்த தங்கமகனால் நம் இந்திய தேசம் இன்று பெருமையடைந்துள்ளது.

-Dr.துரைபெஞ்சமின்
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply