????????????

கருத்துக்கள் புனிதமானவை !

விமர்சனங்கள் சுதந்திரமானவை !


 (சு) வாசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

          கடலெனும் பத்திரிகை உலகில், எத்தனையோ இதழ் ஓடங்கள் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. சந்தர்ப்பச் சூழ்நிலையின் காரணமாக பல நெருக்கடியினால் பல இதழ்கள் மூழ்கி விடுவதும்  உண்டு. வளர்ந்தவர்களுக்கே வால் பிடிப்பதற்கும், நிழலை நிஜமென்று சொல்வதற்கும் ஏராளமான நபர்கள் இன்னும் இருந்துக் கொண்டேதான் இருக்கிறார்கள் என்பதை மனிதாபிமானம் உள்ளவர்கள் யாரும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது. ஆனால், நமது “உள்ளாட்சித் தகவல்” ஊடகம் நாடு வளமாகவும், மக்கள் நலமாகவும் வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு பக்கத்திற்கு பக்கம் பயனுள்ளச் செய்திகளைத் தந்து, படிப்பவர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும், இச்சமுதாயத்திற்கு அருமருந்தாகவும், அறியாமை இருளை அகற்றும் ஒளி விளக்காகவும், உண்மையானவர்களுக்கு உன்னத வழிக்காட்டியாகவும், ஊழல் பேர்வழிகளுக்கு இது ஒரு ஈட்டியாகவும், கடந்த 20 ஆண்டுகளாக ஒழுக்கமாகவும், நடுநிலையோடும், சுதந்திரமாகவும், தமது இதழியல் பணியை இதய சுத்தியோடு ஆற்றியுள்ளது.

மேலும், இதழ் சிறப்புடன் வெளிவருவதற்கு எனது 28 ஆண்டுகளுக்கு மேலான இதழியல் அனுபவம் பயன்படும் என்று முழுமையாக நம்புகின்றேன். வாசக நீதிபதிகளாகிய உங்களின் எதிர்ப்புகளையும், எதிர்பார்புகளையும், தங்களின் மேலான ஆலோசனைகளையும் உடனுக்குடன் எங்களுக்கு தாராளமாக எழுதுங்கள்.

எமது இலட்சியப் பயணம்…!

ஒரு கோடி துன்பங்கள் எமைச் சூழ்ந்த போதிலும்
ஒருபோதும் கலங்கமாட்டோம்!

பொருள் கோடி தந்தாலும் புகழ்தேடி வந்தாலும்
பொய்வாழ்வு வாழமாட்டோம்!

கதியில்லா ஏழைகள் கண்ணீரில் குளிக்கையில்
கை கட்டி நிற்கமாட்டோம்!

விதியென்றப் பெயராலே கொடுமைகள் நடக்கையில்
வேடிக்கைப் பார்க்க மாட்டோம்!

துப்பாக்கித் தோட்டாக்கள் எம் நெஞ்சை
துளைத்திட்ட போதிலும் தூரவே ஓடமாட்டோம்!

பாட்டாளி மக்களின் படைவீரனாகுவோம்
பயந்து அஞ்சி நடுங்க மாட்டோம்!

உடல் வருத்தி உழைக்கின்ற ஏழை மக்களை வணங்குவோம்
எவரையும் வணங்க மாட்டோம்!

ஏழ்மையில் வாடுகின்ற குழந்தையைப் பாடுவோம்
எவரையும் துதிப்பாட மாட்டோம்!

எரிகின்ற தீயிலே எம் உடல் வீழ்ந்தாலும்
இலட்சியம் மாறமாட்டோம், சத்தியம் தவறமாட்டோம்!

எழில் மலராய் மக்கள் இதயத்தில் வாழ்வோம்- நாங்கள்
செயல் வடிவில் என்றுமே சாகமாட்டோம்!

 என்றும் தோழமையுடன்,

டாக்டர் துரை பெஞ்சமின்.

(ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்)