இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு சிறந்ததொரு நடைமுறையாக காமன்வெல்த் பொது நிர்வாக செயலாளர்கள் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது .

லண்டனில் உள்ள மார்ல்பரோ ஹவுஸில் காமன்வெல்த் பொது நிர்வாகத் துறைச் செயலாளர்கள் கூட்டம் 2024 ஏப்ரல் 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பை காமன்வெல்த் செயலகம் சிறந்த நடைமுறையாக அங்கீகரித்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் பொதுச் சேவைத் தலைவர்கள் பங்கேற்ற மூன்றாவது கூட்டத்தின்போது 24.04.2024 அன்று வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில், இந்தியாவின் மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு, நமீபியாவின் அடையாள மேலாண்மை அமைப்பு, கென்யாவின் மனிதவள மேலாண்மை மற்றும் மின்-குடிமக்கள் மாதிரி ஆகியவை சிறந்த நடைமுறைகளாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறைச் செயலாளர் திரு. வி. ஸ்ரீனிவாஸ், மையப்படுத்தப்பட்ட பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு குறித்து விளக்கம் அளித்தார்.

காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி பாட்ரிசியா பேசுகையில், இந்தியாவின் அதிநவீன குறை தீர்க்கும் அமைப்பு மற்றும் நிர்வாகம் சிறந்த நடைமுறையாகும் என்று கூறினார். இந்த நடைமுறையால் இந்தியாவின் 140 கோடி மக்கள் பயனடைவதைப் போலவே காமன்வெல்த் அமைப்பின் மீதமுள்ள 120 கோடி மக்களும் தொழில்நுட்ப தளத்தின் மூலம் பயனடைய முடியும் என்று அவர் தெரிவித்தார்.

‘பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்த நவீன அரசு நிர்வாகத்தை நிறுவனமயமாக்குதல்’ என்ற கருப்பொருளில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. காமன்வெல்த் அமைச்சரவை செயலாளர்கள், மூத்த அரசு அதிகாரிகள், தொழில்துறையினர் மற்றும் புகழ்பெற்ற வல்லுநர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

திவாஹர்

Leave a Reply