கணக்கெடுப்பு என்ற போர்வையில் தேர்தலுக்குப் பிந்தைய பயனாளிகள் சார்ந்த திட்டங்களுக்கு வாக்காளர்களைப் பதிவு செய்வதை நிறுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது .

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 123 (1)-ன் கீழ் பல்வேறு கணக்கெடுப்புகளின் கீழ் வாக்காளர்களின் விவரங்களைக் கோரும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் செயல்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாகப் பரிசீலித்துள்ளது. “சில அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முறையான கணக்கெடுப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய பயனாளிகள் சார்ந்த திட்டங்களுக்கு தனிநபர்களைப் பதிவு செய்ய பாகுபாடான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்” என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

2024 பொதுத் தேர்தலில் பல்வேறு நிகழ்வுகளை கவனித்த ஆணையம், எந்தவொரு விளம்பரங்கள் / கணக்கெடுப்பு / செயலி மூலம் தேர்தலுக்குப் பிந்தைய பயனாளிகள் சார்ந்த திட்டங்களுக்கு தனிநபர்களைப் பதிவு செய்வது உட்பட எந்தவொரு நடவடிக்கையையும் உடனடியாக நிறுத்தவும், தவிர்க்கவும் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இன்று வெளியிட்ட அறிவிக்கையின் மூலம் அறிவுறுத்தியுள்ளது

தேர்தலுக்குப் பிந்தைய நன்மைகளுக்காக பதிவு செய்ய தனிப்பட்ட வாக்காளர்களை அழைக்கும் செயல், வாக்காளருக்கும் உத்தேச  நன்மைக்கும் இடையில் பரிவர்த்தனை உறவு உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கக்கூடும் என்றும், ஒரு குறிப்பிட்ட வழியில் வாக்களிப்பதற்கான ஏற்பாட்டை இது உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

பொதுவான தேர்தல் வாக்குறுதிகள் அனுமதிக்கத்தக்கவை என்பதை ஆணையம் ஒப்புக் கொண்டாலும், கீழேயுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் உண்மையான ஆய்வுகள் மற்றும் அரசியல் ஆதாயத்திற்கான திட்டங்களில் மக்களை சேர்ப்பதற்கு மாறாக, பாகுபாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவதாக தெரிகிறது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 127 ஏ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 123 (1) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 171 (பி) ஆகியவற்றின் கீழ் இதுபோன்ற விளம்பரங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அட்டவணை 1:

செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் தனிப்பட்ட வாக்காளர்களை தங்கள் நலன்களுக்காக பதிவு செய்து கொள்ளுமாறு செல்பேசியில் மிஸ்டுகால் கொடுக்கச் சொல்வது அல்லது தொலைபேசி எண்ணில் அழைக்கச் சொல்வது.

வாக்காளர்களின் பெயர், வயது, முகவரி, செல்பேசி எண், வாக்குச்சாவடி எண், தொகுதி பெயர் மற்றும் எண் போன்ற விவரங்கள் அடங்கிய தனிநபர் பயன்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் இணைக்கப்பட்ட படிவத்துடன் உத்தரவாத அட்டைகள் வழங்குதல்.

 தற்போது நடைபெற்று வரும் அரசின் தனிநபர் நலத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக வருங்கால பயனாளிகளின் சமூக-பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில் வாக்காளர்களின் பெயர், குடும்ப அட்டை எண், முகவரி, தொலைபேசி எண், வாக்குச்சாவடி எண், வங்கிக் கணக்கு எண், தொகுதி பெயர் & எண் போன்ற வாக்காளர்களின் விவரங்களைக் கோரும் படிவங்களை விநியோகித்தல்.

வாக்காளர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், வாக்குச்சாவடி எண், தொகுதி பெயர் & எண் போன்ற விவரங்களைக் கோரும் அரசியல் கட்சிகள் / வேட்பாளர்கள் இணையதளங்கள் அல்லது இணைய / மொபைல் பயன்பாட்டை விநியோகித்தல் அல்லது பரப்புதல் (இது தனிப்பட்ட சலுகைகளைப் பெறுவதற்கான அல்லது அவர்களின் வாக்களிக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கான அழைப்பைக் கொண்டிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்).

செய்தித்தாள் விளம்பரங்கள் அல்லது தற்போதுள்ள தனிநபர் நலத் திட்டங்கள் தொடர்பான நேரடிப் படிவங்களுடன் வாக்காளரின் பெயர், கணவர் / தந்தையின் பெயர், தொடர்பு எண், முகவரி போன்ற வாக்காளரின் விவரங்களைக் கோரும் பதிவுப் படிவம் வழங்குதல்.

திவாஹர்

Leave a Reply