12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கை மாணவி நிவேதா தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சென்னை, திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற நிவேதா என்ற திருநங்கை தேர்ச்சி பெற்றுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் திருநங்கை நிவேதா (வயது 20 ) தமிழகத்திலேயே தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மேற்படிப்பு மேற்கொள்ள வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாகவும் நீட் தேர்வை எழுதியுள்ளதாகவும் திருநங்கை நிவேதா தெரிவித்திருந்தார். இதேபோல், நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை கடந்த ஆண்டு சாதிய வன்கொடுமை தாக்குதலுக்கு ஆளானார். சாதிய வன்கொடுமைக்கு ஆளான மாணவர் சின்னதுரை பிளஸ்டூ தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், நாங்குநேரி மாணவர் சின்னதுரை, திருநங்கை நிவேதா ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சின்னத்துரை, நிவேதா இருவரையும் முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருநங்கை நிவேதா, பொருளாதார வசதி இல்லை. மருத்துவம் படிக்க ஆசையாக இருக்கிறது. சீட் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன். நீட் தேர்வில் சீட் கிடைக்கும் என நம்புகிறேன். உயர் கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்திருப்பதாக தெரிவித்தார். இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை, பி.காம் படித்துவிட்டு சி.ஏ. படிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று கூறினேன். தகுந்த உதவிகளை செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார். மாணவன் சின்னதுரைக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply