ஐசிஎஸ்இ 10, ஐஎஸ்சி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிகழ்நேர தேர்வு முடிவுகளின் அறிவிப்பு மற்றும் டிஜிலாக்கர் மூலம் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் அளிப்பதற்கு நடவடிக்கை.

ஒரு முன்னோடி டிஜிட்டல் உருமாற்ற முயற்சியில், இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (சிஐஎஸ்சிஇ), டிஜிலாக்கர் தளத்துடன் ஒருங்கிணைந்து 2024-ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு (ஐசிஎஸ்இ), பன்னிரெண்டாம் வகுப்பு (ஐஎஸ்சி) தேர்வு முடிவுகளை டிஜிட்டல் முறையில் டிஜிலாக்கர் தளம் வழியாக அறிவிக்கிறது. கூடுதலாக, டிஜிலாக்கர் மூலம் நிகழ்நேரத்தில் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை கிடைக்கச் செய்தது.  இந்த ஆண்டு மொத்தம் 2,43,617 மாணவர்கள் ஐசிஎஸ்இ தேர்வை எழுதினர்; 99,901 ஐஎஸ்சி தேர்வுகளை எழுதினர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே 3.43 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் டிஜிலாக்கரில் சிஐஎஸ்சிஇ வழங்கிய மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களை தடையின்றி அணுகலாம்.

ஐசிஎஸ்இ 2024-க்கான ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 99.47% ஆக இருந்தது, மாணவிகள், மாணவர்களை விட சிறப்பாக செயல்பட்டனர் (மாணவிகள் 99.65% மற்றும் மாணவர்கள் 99.31% தேர்ச்சி பெற்றனர்). ஐ.எஸ்.சி தேர்வுகளில், 98.19% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், இதிலும் மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் (98.92% vs 97.53%).

வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற அமைப்புகளால் டிஜிட்டல் வடிவத்தில் கல்வி நற்சான்றிதழ்களை வழங்குவதற்கும், அணுகுவதற்கும், பாதுகாப்பான, நம்பகமான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு தீர்வை வழங்குவதன் மூலம் இந்த புரட்சிகர நடவடிக்கையை  டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் கீழ் உள்ள முதன்மை தளமான டிஜிலாக்கர் செயல்படுத்தியுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

2,42,328 மாணவர்கள் ஐசிஎஸ்இ தேர்ச்சி: 98,088 பேர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் ஐஎஸ்சியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மதிப்பெண் சான்றிதழ்கள், பிற சான்றிதழ்கள் டிஜிட்டல் வடிவத்தில் டிஜிலாக்கரில் உடனடியாகக் கிடைக்கும்.

மாணவர்கள் தங்கள் உண்மையான டிஜிட்டல் ஆவணங்களை எந்த நேரத்திலும், எங்கும் அணுகலாம்.

சிஐஎஸ்சிஇ-ன் தலைமை நிர்வாகியும் செயலாளருமான டாக்டர் ஜோசப் இம்மானுவேல், தேர்வு முடிவுகள் இப்போது டிஜிலாக்கர் மற்றும் சிஐஎஸ்சிஇ வலைத்தளம் வழியாக நிகழ்நேரத்தில் அணுகக்கூடியவை என்று அறிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply