தமிழக அரசு இக்கோடைக்காலத்தில் விவசாயப் பயன்பாட்டிற்கு மும்முனை மின்சாரமும், பொது மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான மின்சாரமும் கிடைத்திட தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக அரசு கோடைக்காலத்தில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் மின்சாரத் தேவையின் அவசியத்தை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

மாநிலத்தில் அதிக வெப்ப அலை வீசுவதாலும், தண்ணீர் தட்டுப்பாட்டாலும், மின் தட்டுப்பாட்டாலும், மின் தடையாலும் அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகிறார்கள்.

சென்னை மட்டுமல்ல பல்வேறு மாவட்டப் பகுதிகளில் கிராமம் முதல் மாநகரம் வரை மின்தடை ஏற்பட்டு பொது மக்களின், விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை தடைபடுகிறது.

அதாவது மின் தடையால் குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் மின்மோட்டாரில் இருந்து தேவையான நேரத்தில் தண்ணீர் எடுக்க முடியவில்லை.

கோடைக்காலத்தில் நிலத்தடி நீரை நம்பித்தான் விவசாயம் நடைபெறும். ஆனால் இப்போது விவசாயத் தொழிலுக்கு மும்முனை மின்சாரம் கிடைப்பதில்லை. ஏற்கனவே விவசாயத் தொழில் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் மின்சாரம் கிடைக்காமல், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயத்திற்கு மின்சாரம் மிக முக்கியம் என்பதால் குறைந்த பட்சம் 16 மணி நேரத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

பொதுவாக கோடைக்காலத்தில் மின்சாரப் பயன்பாடு அதிகமாக இருக்கும். இருப்பினும் மின்சார சிக்கனம் தேவை என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குறிப்பாக மின்சார விளக்குகள், மின் மோட்டார் உள்ளிட்ட தேவையான பல்வேறு மின்சாதனப் பொருட்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தை பொது மக்களும், விவசாயிகளும் புரிந்து செயல் வேண்டும்

அதே சமயம் மாநிலம் முழுவதும் சீரான மின்சாரம் வழங்கிட, மின்வெட்டை தவிர்த்திட தொடர் நடவடிக்கை தேவை.

எனவே தமிழக அரசு விவசாயத்திற்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும், பொது மக்களுக்கான குடிநீருக்கும், வீட்டு உபயோகத்திற்கும் மற்றும் தொழிலுக்கும் தேவையான மின்சாரம் கிடைக்கவும், மின்கடத்தும் சாதனங்கள் பழுதடைந்தால் காலதாமதம் ஆகாமல் சரிசெய்யவும் தொடர் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply