உணவு பாதுகாப்பு மசோதா : ஏழை மக்களை ஏமாற்றும் செயல்! தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம்

jayalalithaa tn.cmமுதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அதி முக்கியத்துவம் வாய்ந்த தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வடிவு குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் பல விதமான கருத்துகளையும், மாற்றங்களையும், ஐயங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து இருக்கின்ற சூழ்நிலையில், இந்தச் சட்ட முன்வடிவினை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் விவாதித்து, விவாதத்தின் அடிப்படையில் மாற்றங்களை செய்து நடவடிக்கை எடுக்காமல், குறுக்கு வழியில் அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருப்பது ஏழை மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

அவசரச் சட்டம் என்பது அசாதாரண சூழ்நிலையில் மட்டுமே கொண்டு வரப்பட வேண்டிய ஒன்று. இந்த அவசரச் சட்டத்தின் மூலம், கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகளின் முன்பு விவாதிக்கப்பட்டு கருத்தொற்றுமை எழாத நிலையில் உள்ள தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்க முயல்வது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. கடந்த சில ஆண்டுகளாகவே, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பொதுமக்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வந்துள்ளது. இதன் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள மத்திய காங்கிரஸ் அரசு, மக்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இது போன்ற நடவடிக்கையை எடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது.

உண்மையான உணவுப் பாதுகாப்பை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் ஓர் அரசியல் சித்து விளையாட்டாகவே அவசரச் சட்டத்தின் மூலம் இந்த சட்டத்தை நிறைவேற்ற மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முயல்வதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில அரசுகளின் கருத்துகளை கேட்பதற்காக வரைவு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா 2011 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட போதே, இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு 20.12.2011 அன்று நான் ஒரு கடிதம் எழுதி இருந்தேன். இது மட்டுமல்லாமல், கூட்டாட்சி அமைப்பில் மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடம் அளிப்பதே சிறந்த வழி என்றும்; தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட முன்வடிவு என்பது மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயலாகும் என்றும் கோடிட்டுக் காட்டி, தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவிலிருந்து தமிழ் நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தேன். இது மட்டுமல்லாமல், 27.12.2012 மற்றும் 10.6.2013 ஆகிய நாட்களில் பிரதமர் தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து தமிழகத்தின் எதிர்ப்பினை நான் தெரிவித்துள்ளேன்.

ஏற்கெனவே பொது விநியோகத் திட்டத்தில் அனைத்திந்திய அளவில் 56 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்படும் போது, தற்போது இந்த உணவுப் பாதுகாப்பு மசோதா மூலம் 62 மில்லியன் டன் உணவு தானியங்களே அளிக்கப்படும். வெறும் 6 மில்லியன் டன் கூடுதல் உணவுப் பொருட்களை அளித்து, உணவுப் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? அகில இந்திய அளவில் பொது விநியோகத் திட்டத்தை சீரமைக்காமலும், ரெயில் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் உடனுக்குடன் தேவையான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை உறுதிபடுத்தாமலும், உணவு தானிய பொருட்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளை அதிகரிக்காமலும் நிறைவேற்றப்படும் இந்த மசோதா ஏழை, எளிய மக்களுக்கு எவ்வித உணவுப் பாதுகாப்பையும் அளிக்காது.

மேலும், உணவுப் பாதுகாப்புக்கு என உணவு தானியங்கள் வழங்கப்பட வில்லை எனில், உணவு பாதுகாப்புப்படி வழங்கப்படும் என்பது பொது விநியோகத் திட்டத்தையே நாளடைவில் செயலிழக்க செய்வதற்கான தந்திரமோ என எண்ணத் தோன்றுகிறது. உணவு தானியம் விநியோகிக்கப்படாத ஒரு திட்டம் உணவுப் பாதுகாப்புத் திட்டமே அல்ல. தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டத்துடன் தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவினை ஒப்பிட்டுப் பார்த்தால், இது தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதா அல்ல; “தேசிய உணவுப் பாதுகாப்பின்மை மசோதா” என்பது தெள்ளத் தெளிவாகும்.

எனவே, இப்படிப்பட்ட குழப்பமான, பிழைகள் நிறைந்த, மக்களுக்குப் பயனளிக்காத ஒரு வெத்து வேட்டு மசோதாவை அவசரச் சட்டத்தின் மூலம் நிறைவேற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வேதனைக்குரிய செயலாகும். இந்தச் செய்தி நாட்டு மக்களை, குறிப்பாக தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இந்த மாத இறுதியில் துவங்க உள்ள இந்தத் தருணத்தில், உணவு பாதுகாப்பு மசோதாவை அவசரச் சட்டத்தின் மூலம் செயல்படுத்துவது ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கை ஆகும் என்பதையும் இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றக் கூட்டம் துவங்கிய ஆறு வாரங்களுக்குள் நாடாளு மன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைப் பொறுத்த வரையில், எவ்வித திருத்தமும் மேற்கொள்ளாமல் இந்தச் சட்டத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிட வேண்டும் என்பது தான் எண்ணம்.

மொத்தத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி தனக்கு பாதுகாப்பு தேட நினைக்கிறதே தவிர, உணவுப் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய நினைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோகத் திட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளதாலும், எவ்வித பாகுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவதாலும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டிற்கு இந்தத் திட்டத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தற்போது வழங்கி வரும் அரிசியின் அளவை குறைக்கக் கூடாது என்றும் தமிழக மக்கள் சார்பில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அவசர கதியில் அவசரச் சட்டத்தின் மூலம் செயல் படுத்தப்பட உள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா “பதறிய காரியம் சிதறும்“ என்ற பழமொழிக்கேற்பவே அமையும் என்பதையும், மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்துள்ள மத்திய அரசின் ஊழல்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மூடி மறைப்பதற்காக மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ள இந்த முயற்சி படுதோல்வியில் முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Leave a Reply