திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் மணபுரம் தனியார் நகை கடன் வழங்கும் நிதி நிறுவனம் உள்ளது. இந்த தனியார் நகைக்கடன் நிறுவனத்தில் திருநெடுங்களம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் சுமார் 165 கிராம் நகையை ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்திற்கு கடந்த ஜனவரி மாதம் அடகு வைத்ததாகவும், அதற்கு உரிய வட்டியை கட்டி வந்ததாகவும், இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு கடன்களை கட்டுவதற்கு தளர்வுகள் அறிவித்துள்ளதால், அந்த நாட்களில் கடனுக்கு உரிய வட்டியை கட்டவில்லை என்றும், இதனால் அந்த நிதி நிறுவனம், அந்த கடன் தொகைக்கு உரிய வட்டியோடு, தவறுதல் வட்டியையும் சேர்த்து கட்ட வேண்டும் என்று, திருநெடுங்களம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி மற்றும் அவரது கணவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஸ்ரீநிதி மற்றும் சதீஷ்குமார் தாங்கள் அடகு வைத்த நகைக்கு மாதம் எவ்வளவு வட்டி போடுகிறார்கள் என்பது குறித்த ஸ்டேட்மெண்ட் கேட்டதாகவும், அதற்கு மணபுரம் நிதி நிறுவன ஊழியர்கள் தர மறுத்ததோடு, தொடர்ந்து வட்டி மற்றும் அபராத வட்டி என கூறி கூட்டு வட்டியை கட்ட சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் வெறுப்படைந்த ஸ்ரீநிதி மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் ஆகிய இருவரும், அந்த தனியார் நகை கடன் நிதி நிறுவன அலுவலகத்தில் நுழைந்து, தங்களுக்கு உரிய நியாயம் வேண்டும். இல்லை என்றால், பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொள்ளப் போகப்போவதாக கூறி, கையில் பெட்ரோல் கேனுடன் தனியார் நகை கடன் நிதிநிறுவனத்திற்கு வந்திருப்பது குறித்து, திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த நிதி நிறுவனத்திற்கு உள்ளேயே ஸ்ரீநிதி மற்றும் சதீஷ்குமார், நிதி நிறுவன ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, இச்சம்பவம் குறித்து ஸ்ரீநிதி மற்றும் சதீஷ்குமாரிடம் முறையான புகாரைப் பெற்றுக்கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களையும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது கணவரையும், திருவெறும்பூர் காவல் நிலையம் வருமாறு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-ஆர்.சிராசுதீன்.

Treating CUSTOMERS very bad……..