மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, குஜராத்தில் உள்ள NH-48 நெடுஞ்சாலையின் சூரத்-பரூச் பிரிவில் அமைந்துள்ள சோராயசி சுங்கச்சாவடியில், இந்தியாவின் முதல் பலவழி தடையற்ற (MLFF) தடையற்ற சுங்கக் கட்டண முறையைத் தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன அமைப்பு, தானியங்கி வாகனப் பதிவு எண் அங்கீகாரம் (ANPR) மற்றும் FASTag போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாகனங்களை நிறுத்தத் தேவையின்றி தடையற்ற சுங்கக் கட்டண வசூலைச் சாத்தியமாக்குகிறது.
MLFF-இன் அறிமுகமானது, இந்தியாவின் சுங்கச்சாவடி அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவதிலும், உலகத் தரத்திற்கு இணையாக தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த அமைப்பு பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும், நெடுஞ்சாலைகளில் நெரிசலைக் குறைக்கும், எரிபொருள் செயல்திறனை மேம்படுத்தும், வாகனப் புகையைக் குறைக்கும், மற்றும் சுங்கச்சாவடி நடவடிக்கைகளில் மனிதத் தலையீட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடையற்ற சுங்கக் கட்டண முறையானது, நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் தளவாடங்களின் வேகமான, திறமையான போக்குவரத்தை சாத்தியமாக்குவதன் மூலம், குடிமக்களின் ‘வாழ்க்கை எளிமையை’ மேம்படுத்தி, ‘வணிகம் செய்வதை எளிதாக்கும்’ என்று திரு கட்கரி கூறினார். மேலும், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்த முயற்சியானது, திறமையான, வெளிப்படையான மற்றும் பயணிகளுக்கு உகந்த, உலகத் தரம் வாய்ந்த, தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்
