சர்வதேச போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக, தில்லி, சரோஜினி நகர் பில்லஞ்சியைச் சேர்ந்த, தேடப்பட்டு வந்த குற்றவாளியான வீரேந்தர் சிங் பசோயாவை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. இன்று (14.08.2026) அதிகாலை புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது அவர் என்சிபி-யால் கைது செய்யப்பட்டார்.
என்சிபி-யின் கோரிக்கையின் பேரில் வெளியிடப்பட்ட இன்டர்போல் சிவப்பு அறிவிக்கையைத் (ரெட் நோட்டீஸ்) தொடர்ந்து, பசோயா 2026 ஜூன் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது செய்யப்பட்டார். இந்திய அமைப்புகள் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் மேற்கொண்ட தொடர்ச்சியான ஒருங்கிணைப்பின் மூலம் அவர் இந்தியாவுக்குத் திரும்புவது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களை இடைவிடாமல் தேடிப்பிடித்து, சமரசமற்ற அணுகுமுறையின் மூலம் அவர்களின் முழு போதைப் பொருள் கட்டமைப்புச் சூழலையும் அழித்து வருகிறது என்று கூறியுள்ளார். இந்தக் கைது, அவர்களால் தப்பிக்க முடியாது என்பதை நமது அமைப்புகள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளதை எடுத்துக் காட்டுவதாக திரு அமித்ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
2024 பிப்ரவரியில் புனே நகர காவல்துறை 500 கிராம் மெஃபெட்ரோனைக் கைப்பற்றியபோது இந்த வழக்கு தொடங்கியது. அதன் பிறகு, முழு போதைப்பொருள் கடத்தல் கட்டமைப்பையும் அடையாளம் கண்டு தகர்க்கும் நோக்கில், முழுமையான அணுகுமுறையைக் கையாண்டு விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. தொடர் நடவடிக்கைகளின் விளைவாக, புனேவிலிருந்து சுமார் 867 கிலோ மெஃபெட்ரோனும், தில்லியிலிருந்து 970 கிலோவும் மீட்கப்பட்டன. இதன் மூலம் மொத்தமாக மீட்கப்பட்ட மெஃபெட்ரோனின் அளவு சுமார் 1,837 கிலோவாகும்.
விசாரணையில், பசோயா ஒரு முக்கிய சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகவும், அவர் வெளிநாடுகளில் இருந்து இந்தக் கும்பலின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு மெஃபெட்ரோன் சரக்குகளை ஏற்றுமதி செய்ய உதவியதாகவும் அடையாளம் காணப்பட்டார். போதைப்பொருட்களைக் கொள்முதல் செய்தல், கொண்டு செல்லுதல், சேமித்தல், விநியோகித்தல் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் பசோயாவின் பங்கு வெளிப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தப்பியோடிய பசோயா கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
திவாஹர்
