மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய தொலைத்தொடர்புத் துறையின் (DoT) கீழ் உள்ள டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (C-DOT), தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கிய உள்நாட்டுத் தொழில்நுட்பமான செல் பிராட்காஸ்ட் சிஸ்டத்தை (CBS) மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இன்று தொடங்கி வைத்தார். இந்த முயற்சி, இந்தியாவின் அவசரகாலத் தகவல் தொடர்பு அமைப்புகளை வலுப்படுத்துவதற்கும், பொதுப் பாதுகாப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
மேடையில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில் மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன்; தொலைத்தொடர்பு செயலாளர் திரு அமித் அகர்வால்; தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) தலைமை இயக்குநர் திரு பியூஷ் ஆனந்த்; தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) செயலாளர் திரு மனிஷ் பரத்வாஜ்; உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அனுஜ் சர்மா; மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் திரு கிருஷ்ண வத்சா ஆகியோர் அடங்குவர்.
தொலைத்தொடர்புத் துறை, உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றின் இந்த மைல்கல் சாதனை குறித்துப் பேசிய யூனியன் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா, “செல் பிராட்காஸ்ட் சிஸ்டத்தின் (CBS) அறிமுகம், இந்தியாவின் பேரிடர் மேலாண்மைக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் படியாகும். இது, குடிமக்களைப் பாதுகாப்பதில், பேரிடர் நிகழ்ந்த பிறகு செயல்படும் அணுகுமுறையிலிருந்து, முன்கூட்டியே செயல்படும் அணுகுமுறைக்கு நாம் மாறியிருப்பதைப் பிரதிபலிக்கிறது. மேம்பட்ட தொலைத்தொடர்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம், CBS கிட்டத்தட்ட நிகழ்நேர, புவியியல் ரீதியாக இலக்கு வைக்கப்பட்ட எச்சரிக்கைகளை லட்சக்கணக்கானோரை உடனடியாகச் சென்றடையச் செய்கிறது. இதன்மூலம் எந்தவொரு தனிநபரும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட, உலகளவில் தரப்படுத்தப்பட்ட இந்தத் தீர்வு, நமது தயார்நிலையை வலுப்படுத்துகிறது, பதிலளிக்கும் திறன்களை மேம்படுத்துகிறது, மேலும் பாதுகாப்பான, மீள்திறன் மிக்க இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது” என்றார்.
நிகழ்ச்சியின் போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு அனுஜ் சர்மா, பேரிடர் தயார்நிலை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) தற்போதைய முன்னெடுப்புகள் குறித்து மத்திய அமைச்சருக்கு விளக்கவுரை அளித்தார்.
செல் பிராட்காஸ்ட் சொல்யூஷன் (CBS) என்பது ஒரு தொலைத்தொடர்பு வசதி கொண்ட பொது எச்சரிக்கை அமைப்பாகும். இது, வரையறுக்கப்பட்ட ஒரு பகுதிக்குள் உள்ள மொபைல் சாதனங்களுக்கு, ஒரே நேரத்தில், புவியியல் ரீதியாக இலக்கு வைக்கப்பட்ட எச்சரிக்கைகளை ஒளிபரப்ப அதிகாரிகளுக்கு உதவுகிறது. CAP-அடிப்படையிலான SACHET தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இது, எச்சரிக்கைகளை விரைவாகவும் தரப்படுத்தப்பட்ட முறையிலும் பரப்ப அனுமதிக்கிறது. இது பாரம்பரிய SMS-அடிப்படையிலான அமைப்புகளின் வரம்புகளைக் கடந்து, இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெரும் மக்கள் தொகைக்கு முக்கியமான தகவல்களை விரைவாகவும் திறமையாகவும் பரப்புவதை உறுதி செய்கிறது.
திவாஹர்
