குழந்தைகள் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு மைல்கல் நடவடிக்கையாக, சமீபத்தில் நிறைவடைந்த பொது சுகாதார சேவை வழங்குதலில் சிறந்த நடைமுறைகள் குறித்த தேசிய மாநாட்டில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் குறித்த வழிகாட்டு ஆவணத்தை வெளியிட்டது.
இந்த வழிகாட்டு ஆவணம், குழந்தைப் பருவ நீரிழிவு நோயைக் கண்டறிதல், நோய் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் நீண்ட கால மேலாண்மை ஆகியவற்றுக்கான ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் தரப்படுத்தப்பட்ட தேசிய கட்டமைப்பை முதன்முறையாக நிறுவுகிறது. இந்த முயற்சி, குழந்தைப் பருவ நீரிழிவு நோய்ப் பராமரிப்பை பொது சுகாதார அமைப்பில் ஒருங்கிணைத்துள்ள ஒரு சில நாடுகளின் குழுவில் இந்தியாவை இடம்பெறச் செய்கிறது.
இந்த ஆவணத்தின் நோக்கம், பிறப்பு முதல் 18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் சமூகம் மற்றும் பள்ளி சார்ந்த தளங்கள் மூலம் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உலகளாவிய பரிசோதனையை உறுதி செய்வதாகும். சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக இரத்த சர்க்கரை பரிசோதனை செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, உறுதிப்படுத்தும் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக மாவட்ட அளவிலான சுகாதார நிலையங்களுக்கு அவர்கள் உரிய நேரத்தில் பரிந்துரைக்கப்படுவார்கள்.
இந்தக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சம், பொது சுகாதார நிலையங்களில் ஒரு விரிவான, இலவசப் பராமரிப்புத் தொகுப்பை வழங்குவதாகும். இதில் பரிசோதனை, நோயறிதல் சேவைகள், வாழ்நாள் முழுவதும் இன்சுலின் சிகிச்சை, குளுக்கோமீட்டர்கள் மற்றும் சோதனைப் பட்டைகள் போன்ற கண்காணிப்புக் கருவிகள் மற்றும் வழக்கமான பின்தொடர் பராமரிப்பு ஆகியவை அடங்கும். இந்த அணுகுமுறையானது, நிதிச் சுமையைக் குறைக்கவும், நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கான தடையற்ற சிகிச்சையை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல் ஆவணம், சமூக அளவிலான பரிசோதனையை மாவட்ட மருத்துவமனை அடிப்படையிலான மேலாண்மை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் மேம்பட்ட பராமரிப்புடன் இணைக்கும் ஒரு ஒருங்கிணைந்த தொடர் பராமரிப்பையும் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஒருங்கிணைப்பு, எந்தவொரு குழந்தையும் இந்த அமைப்பில் விடுபட்டுப் போகாமல் இருப்பதையும், நோய் கண்டறியப்பட்டது முதல் நீண்டகாலப் பின்தொடர் பராமரிப்பு வரை பராமரிப்பு தடையின்றித் தொடர்வதையும் உறுதி செய்கிறது.
ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த முன்னெடுப்பானது, கழிப்பறைக்குச் செல்லுதல், தாகம், சோர்வு மற்றும் உடல் மெலிதல் ஆகிய “4T” விழிப்புணர்வுக் கட்டமைப்பை ஊக்குவிக்கிறது. இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் வகை 1 நீரிழிவு நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காண உதவுகிறது.
மருத்துவ நெறிமுறைகளுடன் கூடுதலாக, இந்த ஆவணம் குடும்பத்தினர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கு அதிகாரமளிப்பதை வலியுறுத்துகிறது; இன்சுலின் செலுத்துதல், இரத்தச் சர்க்கரை அளவைக் கண்காணித்தல், அவசரகால நடவடிக்கைகள் மற்றும் தினசரி நோய் மேலாண்மை ஆகியவற்றில் முறையான பயிற்சியை வழங்குகிறது. மேலும், இது சான்றுகள் அடிப்படையிலான சிகிச்சை வழிகாட்டுதல்கள், வழக்கமான கண்காணிப்பு அட்டவணைகள் மற்றும் சிக்கல்களைத் தடுப்பதற்கான நெறிமுறைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த முன்னெடுப்பானது, நோயை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் இறப்பு விகிதத்தைக் குறைத்தல், சிக்கல்களைத் தடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க பொது சுகாதாரப் பலன்களை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால அடிப்படையில், இது சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைக் குறைப்பதற்கும், குழந்தைகளிடையே ஏற்படும் தொற்றா நோய்களை நிர்வகிப்பதற்கான சுகாதார அமைப்பின் திறனை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கும்.
இந்த வழிகாட்டு ஆவணத்தின் வெளியீடானது, ஆரம்பகாலத் தலையீடு, தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் மேம்பட்ட சுகாதார விளைவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, அனைத்துக் குழந்தைகளுக்கும் அணுகக்கூடிய, மலிவு விலையிலான, சமத்துவமான மற்றும் தரமான சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்வதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எம்.பிரபாகரன்
