இந்தியாவின் உயிரியல் பாதுகாப்பை வலுப்படுத்தும் ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சலுக்கான ஐசிஏஆர்-ன் உள்நாட்டுத் தடுப்பூசி.

ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் வைரஸால் (ASFV) ஏற்படும் ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் நோய், உலகம் முழுவதும் வளர்ப்புப் பன்றிகள் மற்றும் காட்டுப் பன்றிகளைப் பாதிக்கும் மிக மோசமான, எல்லைகளைக் கடந்து பரவக்கூடிய விலங்கு நோய்களில் ஒன்றாகும். இந்தியாவில் இந்நோய்க்கான சிகிச்சையோ, வணிக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ இல்லாத நிலையில், நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பெரும்பாலும் விரைவான நோயறிதல், பாதிக்கப்பட்ட விலங்குகளை அழித்தல் மற்றும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றையே பெரிதும் சார்ந்திருக்கின்றன.

இந்நிலையில், போபாலில் உள்ள ஐசிஏஆர்-தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் நிறுவனத்தின் (ICAR-NIHSAD) விஞ்ஞானிகள், பன்றிகளுக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு ‘MA-104 செல் வரிசை’ சார்ந்த, வீரியம் குறைந்த ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். எம்ஏ -104 செல் வரிசையில் தனித்துவமான மரபணு நீக்கங்களைக் கொண்ட, வீரியம் குறைக்கப்பட்ட புதிய ஏஎஸ்எஃப்வி மரபணு வகை II வைரஸைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தத் தடுப்பூசி, கால்நடை மருத்துவ ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், பெருமளவிலான உற்பத்திக்கும் மிகவும் ஏற்றதாக உள்ளது.

இந்தத் தடுப்பூசி, மலட்டுத்தன்மை, தூய்மை, பாதுகாப்பு, மரபணு நிலைத்தன்மை, நோயெதிர்ப்புத் திறன், பாதுகாப்புத் திறன் மற்றும் வீரியம் மீள்தல் ஆய்வுகள் உள்ளிட்ட விரிவான ஆய்வக மதிப்பீடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. மேலும், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறையுடன் இணைந்து இது சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம், களச் சூழல்களில் இதன் பாதுகாப்பும் செயல்திறனும் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எட்டு வாரங்களுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பன்றிகளுக்கு இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஐசிஏஆர்-ன் நிறுவன தின விழாவில், மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் முன்னிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், இந்தத் தடுப்பூசியை நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

கால்நடைத் தடுப்பூசி மேம்பாட்டில் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய முயற்சியாகவும், உலகளவில் மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்கும் நாடாக இந்தியாவை நிலைநிறுத்தும் ஆற்றல் கொண்டதாகவும் இது அமைந்துள்ளது.

Leave a Reply