டி-72, டி-90 பீரங்கி வாகனங்களுக்கான துணை மின் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கு ரூ.586 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் அக்கியூரேட் இன்டஸ்ட்ரியல் கன்ட்ரோல்ஸ் தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. புதுதில்லியில் 2026 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
துணை மின் உபகரணங்கள் என்பது பீரங்கி வாகனங்களின் பல்வேறு பாகங்களுக்கு மின் உற்பத்தி செய்வதற்கான ஒரு மாற்று முறையாகும். உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட துணை மின் உபகரணங்களை அறிமுகப்படுத்துவது இந்திய ராணுவத்தின் படைப்பிரிவுகளின் செயல்பாட்டு தயார்நிலை, நம்பகத்தன்மை, நிலைத்தன்மை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும்.
இக்கொள்முதல், பீரங்கி வாகனங்களின் முக்கிய துணை பிரிவுகளை உள்நாட்டிலேயே தயாரிப்பதை நோக்கிய ஒரு சிறப்புமிக்க நடவடிக்கையாகும். அத்துடன், தொழில்துறை தலைமையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை இது நிரூபிக்கிறது.
இந்த ஒப்பந்தம் 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போவதோடு பாதுகாப்புத்துறையில் தற்சார்பை அடைவதற்கும், உலக அளவில் போட்டித்தன்மைமிக்க இந்திய பாதுகாப்புத் தளவாட தொழில்துறையை கட்டமைப்பதற்கும் ஒரு மைல்கல்லாக அமைகிறது.
எஸ்.சதிஸ் சர்மா
