நாட்டின் 79-வது சுதந்திரத்தை கொண்டாடும் வகையில், தேசிய மாணவர் படை (என்சிசி) இன்று (2026 ஆகஸ்ட் 02) புதுதில்லியில் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. இதன் நோக்கம், தேசிய மாணவர் படையின் அடித்தளமாக விளங்கும் தேசபக்தி, ஒழுக்கம், ஒற்றுமை, தேசிய சேவை ஆகிய அடிப்படை விழுமியங்களை வலுப்படுத்துவதோடு, உடற்தகுதி, சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு ஆகியவற்றை கொண்டிருக்க இளைஞர்களை ஊக்குவிப்பதாகும்.
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி. மேரி கோம், புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ஆகியோர் முன்னிலையில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா சைக்கிள் பேரணியை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். என்சிசி-யின் தலைமை இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ், 79 என்சிசி மாணவர்களைக் கொண்ட குழுவை 79 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தில் வழிநடத்தினார். இந்நிகழ்வு மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் தொடங்கி, தேசிய தலைநகரின் முக்கிய இடங்கள் வழியாக நிர்ணயிக்கப்பட்ட பாதையை வெற்றிகரமாகக் கடந்து அதே மைதானத்தில் நிறைவடைந்தது.
“தூய்மையான இந்தியா, பசுமையான இந்தியா, ஆரோக்கியமான இந்தியா” என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சைக்கிள் பேரணி, காசநோய் இல்லாத பாரதம், தூய்மை இந்தியா, அன்னையின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம், இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கம் போன்ற தேசிய இயக்கங்களுக்கான என்சிசி-யின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த நிகழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவித்தல், கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றுடன், மிதிவண்டியை ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த, நீடித்த போக்குவரத்து முறையாக ஏற்றுக்கொள்ளுமாறு பங்கேற்பாளர்களையும் பொதுமக்களையும் ஊக்குவித்தது.
எஸ்.சதிஸ் சர்மா
