தீவிரமான தொழில்நுட்பப் புரட்சி நடைபெறும் தற்போதைய காலகட்டத்தில், எதிர்காலத்திற்குத் தயாராக இருப்பதற்கு, ஆராய்ச்சியில் தொடர்ச்சியான கவனம் செலுத்துவதும், எதிர்பாராத ஆச்சரியங்களை உருவாக்கும் திறனை வளர்ப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். அவர், 2026 மே 04 அன்று உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில், இந்திய ராணுவத்தின் வடக்கு மற்றும் மத்திய கட்டளைகள் மற்றும் இந்தியப் பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் ‘நார்த் டெக் சிம்போசியம்’ தொடக்க அமர்வின்போது, பாதுகாப்புப் படையினர், தொழில்துறைத் தலைவர்கள், புதுமைப் படைப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறைப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினார்.
நவீனகாலப் போர்முறையில் காணப்படும் தொழில்நுட்ப மாற்றங்களின் அதிவேகத்தையும், இதுவரை கற்பனை செய்யப்படாத திடீர்த் தாக்குதல் என்ற அம்சம் தொடர்ந்து தோன்றி வருவதையும் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். “ரஷ்யா-உக்ரைன் மோதலில், வெறும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில், போரின் தன்மையானது டாங்கிகள் மற்றும் ஏவுகணைகளிலிருந்து, போரின் போக்கையே மாற்றக்கூடிய ட்ரோன்கள் மற்றும் சென்சார்களாக உருமாறியது. மேலும், அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் பொருட்கள் கொடிய ஆயுதங்களாக மாறி வருகின்றன. லெபனான் மற்றும் சிரியாவில் நடந்த பேஜர் தாக்குதல்கள், நவீனகாலப் போர் முறைகளை மறுமதிப்பீடு செய்யத் தூண்டியுள்ளன. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், நாம் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தேவை ஏற்பட்டால், தனது எதிரிக்கு எதிராக எதிர்பாராத தாக்குதலைத் தொடுப்பதற்கு நாட்டைத் தயார்படுத்தும் திறன்களை வளர்த்து, ஒரு செயலூக்கமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். “போரில், ஆச்சரியமூட்டும் திறனைக் கொண்ட தரப்பிற்கே தீர்க்கமான அனுகூலம் எப்போதும் கிடைக்கும் என்பதற்கு வரலாறு சாட்சி. நமது பாதுகாப்புப் படைகள் ஏற்கனவே அந்தத் திசையில் செயல்பட்டு வரும் நிலையில், நாம் இன்னும் அதிக செயலூக்கத்துடன் மேலும் முன்னேற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
திவாஹர்
