கோயில் வளாகத்தில் இரவு நேரத்தில் காரை நிறுத்த முயற்சி!- தடுத்தப் பாதுகாவலர் மீது கொலைவெறி தாக்குதல்.

அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்.

திருவண்ணாமலை மாவட்டம், படவேடு என்றழைக்கப்படும் “படைவீடு” கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில், திருவண்ணாமலையிலிருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், வேலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், ஆரணியிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் இது அமைந்துள்ளது.

10,11 ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்களின் கீழ் குறுநில மன்னராக ஆண்டு வந்த சம்புவராயர்கள், சோழ அரசு வீழ்ச்சிக்குப்பின் தனி அரசர்களாக அறிவித்து படைவீட்டில் சம்புவராயர்கள் ஆட்சியை அமைத்தனர். இவர்கள் ஆட்சி செய்த பகுதி “படை வீடு” என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சம்புவராயர்களின் கோட்டை சிதிலங்கள் இங்கு காணப்படுகின்றன.

இங்கு அமைந்துள்ள அருள்மிகு ரேணுகாம்பாள் கோயில் சக்தி தலங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்த்தாகும். கருவறையில் அம்மன் சுயம்பு ரூபமாய் எழுந்தருளியுள்ளதுடன் பிரம்மன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் அருகில் கொண்டு உலகில் சக்தியே பிரதானம் என்பதை எடுத்துக்காட்டி அருள்புரிந்து வருகின்றாள்.

பின்புறம் அம்மன் சுதை வடிவிலான திருமேனி உள்ளது. அதனருகில் ஆதிசங்கரரால் பிரதிட்டை செய்யப்பட்ட பாணலிங்கமும், ஐனாகர்ஷண சக்கமும் உள்ளது. ஜமத்கனி முனிவர் யாகஞ்செய்த இடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் ஆனீ மாதத்தில் வெட்டியெடுத்து வரப்படும் மண்தான், இங்கு திருநீற்றுப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை நெற்றியில் இட்டு கொண்டால் பிணிகள் அகலும், தீய சக்திகள் அண்டாது என்பது மக்களின் நம்பிக்கை.

ஆடி மாத வெள்ளிகிழமைகளில் திருவிழா வெகு விமர்சையாக இங்கு  நடைபெறும். இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

கோயில் நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் இதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தர்கள் 500 அடி தூரத்திற்கு முன்பே அதற்கான வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு வரவேண்டும் என்ற உத்தரவும் நடைமுறையில் இருந்து வருகிறது.

பாதுகாவலர் டி.முருகேசன்.

இந்நிலையில், நேற்று இரவு 11 மணியளவில் சோளிங்கர் பகுதியில் இருந்து இக்கோயிலுக்கு காரில் வந்த நபர்கள், காரை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல், கோயில் வளாகம் உள்ளே கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர். அப்போது இரவு பாதுகாப்பு பணியில் இருந்த Sis Security” என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆரணி, புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த டி.முருகேசன் என்பவர், காரை உள்ளே கொண்டு வருவதை தடுத்துள்ளார். வாகனங்களுக்கென தனி பார்க்கிங் உள்ளது. அங்கு நிறுத்திவிட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல், பாதுகாவலர் டி.முருகேசன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாதுகாவலர் டி.முருகேசன் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஆரணி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

திருவிழா நடைபெறும் காலங்களில் பகல் நேரங்களில் மட்டும்தான் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இரவு நேரத்தில் காவல் துறையினர் இல்லாததால் தான் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் குறித்து கோயில் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு விசாரித்தோம். தனியார் நிறுவனத்தை Sis Security” சார்ந்த ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் செக்குரிட்டியாக இங்கு பணிசெய்கிறார்கள்இதுபோன்ற பிரச்சனைகளை அந்நிறுவனத்தின் நிர்வாகி பார்த்துகொள்வார். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்கின்றனர்.

பாதுகாவலருக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்கிறபோது, இங்கு வரும் அப்பாவி பக்தர்களை  யார் காப்பாற்றுவது?

  -மு ராமராஜ்.

  

 

 

Leave a Reply