மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, இன்று (16.08.2026) ராஜஸ்தானின் சித்தோர்கரில் அவரது சிலையைத் திறந்து வைத்தார். மேலும், ராஜஸ்தான் அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அமித் ஷா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளான இன்று, இங்கு ரூ.1.5 கோடிக்கும் அதிகமான செலவில் 21 அடி உயர வாஜ்பாய் சிலை நிறுவப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மாநிலத்தில் 15 மாவட்டங்களில் ரூ.5,755 கோடி மதிப்பிலான 944 வளர்ச்சித் திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அடல் பிஹாரி வாஜ்பாய் தனது சிறுவயதிலிருந்தே தேசியவாதப் பாதையில் பயணித்ததாக அவர் கூறினார். உலகளாவிய அழுத்தங்களுக்குப் பணியாமல் இந்தியாவை அணுசக்தி நாடாக மாற்றியதோடு, ஒவ்வொரு கிராமத்தையும் சாலைகள் மூலம் இணைக்கும் பணியையும் வாஜ்பாய் மேற்கொண்டதாக திரு அமித் ஷா தெரிவித்தார். எண்ணற்ற பிற தனித்துவமான முயற்சிகளையும் அவர் தொடங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார். வாஜ்பாயின் பதவிக்காலத்தில், பழங்குடியினர் நல அமைச்சகத்தை நிறுவியது அவரது மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும் என்று திரு அமித் ஷா கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா ஆகியோரின் தலைமையில் ராஜஸ்தான் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாக மத்திய அமைச்சர் திரு அமித் ஷா குறிப்பிட்டார்.
எம்.பிரபாகரன்
