கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மான்களை வேட்டையாடியதாகக் கூறி தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் சுட்டுக்கொன்றது கொடுமையிலும் கொடுமை.
மான்களை வேட்டையாட சென்றார்களா என்பதே கேள்விக்குறி. அப்படியே தவறான செயல்பாட்டில் ஈடுபட முயன்றாலும் அதற்காக சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டுமே தவிர சுட்டுக்கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பானது.
தமிழக அரசு உடனடியாக கர்நாடக அரசிடம் கண்டிப்போடு பேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிக பட்ச நிவாரணம் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.
மேலும் சுட்டுக்கொன்ற வனத்துறையினர் மீது கர்நாடக அரசு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு கர்நாடக அரசை வற்புறுத்த வேண்டும்.
இனிமேல் கர்நாடகாவில் தமிழர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் தமிழக அரசு கர்நாடக அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.மா.கா(மூ) சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையேயான நல்லுறவு நீடிக்கும் வகையில் கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்பதை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
