சி-டாட் ஆராய்ச்சி சமூகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி பாராட்டு .

விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி,மார்ச் 26, 2024 அன்று தில்லி வளாகத்தில் டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையத்தைப் (சி-டாட்) பார்வையிட்டார். சி-டாட் என்பது இந்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமாகும். பாதுகாப்பு தகவல் தொடர்பு மற்றும் சைபர் பாதுகாப்பு போன்ற முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கான உள்நாட்டு, பாதுகாப்பான தொலைத் தொடர்பு தீர்வுகளை உருவாக்குவதில் இது தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

சி-டாட் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ராஜ்குமார் உபாத்யாயா, பல்வேறு தொலைத்தொடர்பு தயாரிப்பு சார்ந்த தகவல்கள்/ தீர்வுகள் மற்றும் பாதுகாப்பு செயல்பாட்டு மையம் (இணைப்பில் உள்ள தீங்குநிரல்களை நிகழ்நேரத்தில் கண்டறிதல்), நிறுவன பாதுகாப்பு மையம் (அனைத்து இறுதி புள்ளிகளையும் உள்ளடக்கிய நிறுவன அளவில் தீங்கிழைக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை நிகழ்நேரத்தில் கண்டறிதல் மற்றும் தணித்தல்), குவாண்டம் விசை விநியோகம், போஸ்ட் குவாண்டம்    கிரிப்டோகிராஃபி போன்ற முக்கிய தொலைத்தொடர்பு பாதுகாப்பு தீர்வுகள் குறித்து விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார். 4ஜி கோர் & 4ஜி  ஆர்.ஏ.என், 5ஜி கோர் & 5ஜி  ஆர்.ஏ.என், சி.ஏ.பி-ஐப் பயன்படுத்தி பல்வேறு பிரச்சினைகளுக்கான  தீர்வுகளும் விவாதிக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, தீர்வுகளின் செயல்பாட்டு அம்சங்களை முன்னிலைப்படுத்தும் நேரடி செயல்விளக்கம் நடைபெற்றது.

சி-டாட்டின் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தளபதி, இணைப்பு மையத்திலிருந்து தரவு மையமாக மாறிவரும்  நவீன போரின் சூழலில், எதிர்கால மற்றும் மேம்பட்ட பாதுகாப்பான தகவல் தொடர்பு தீர்வுகளை ஒருங்கிணைக்க சி-டாட் மற்றும் விமானப்படைக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.

விமானப்படையின் தேவைகளுக்கு ஏற்ப அதிநவீன பாதுகாப்பு தீர்வுகளை உருவாக்குவதில் சி-டாட்டின் உறுதிப்பாட்டை டாக்டர் உபாத்யாயா வலியுறுத்தினார்.

திவாஹர்

Leave a Reply