தமிழக அரசு, கடந்த 2 தினங்களாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாய விளைப்பொருட்களுக்கு ஏக்கருக்கு ரூ. 20,000 நிவாரணமாக வழங்க வேண்டும்!-ஜி.கே‌.வாசன் வலியுறுத்தல்.

ஜி.கே.வாசன்.

தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசு, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நிவாரணம் வழங்க முன்வர வேண்டும்.கடந்த 2 தினங்களாக மாநிலத்தில் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெல் உட்பட பலவகையான பயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உட்படுகிறார்கள்.எனவே தமிழக அரசு, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய விளைப்பொருகளுக்கு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.20,000 கொடுக்க முன்வர வேண்டும்.

மேலும் தொடர்ந்து மழை பெய்யும் என்ற செய்தியால் முன்னெச்சரிக்கை, முன்னேற்பாடு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்.ஏனென்றால் ஏற்கனவே தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டப் பகுதி மக்கள் உடமைகளை இழந்து, பொருளாதாரம் இல்லாமல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இனிவரும் மழையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தகுந்த உதவிகளை செய்ய, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.எனவே தமிழக அரசு, மழைக்காலப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், சமாளிக்கும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப, பொது மக்களின் இழப்பை ஈடு செய்வதற்கு ஏற்ப நிவாரணத்தை வழங்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply