பிடிவாதம் வேண்டாம்; வாய்ப்பை நழுவவிடக் கூடாது – தமிழகத்தில் சாதிவாரிகணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல் .

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது; மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பு தான் சமூகநீதியை வழங்கும் என்பதால், மத்திய அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அனைத்து நிலைகளிலும் உறுதியான நிலையில், அதற்கான பொறுப்பை தமிழக அரசு தட்டிக்கழிப்பது வருந்தத்தக்கது.

பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன். தொடக்கத்தில் அதற்கு பதிலளிக்காத முதலமைச்சர், ஒரு கட்டத்தில் தேசிய அளவில் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மத்திய அரசை வலியுறுத்தத் தேவையில்லை;தமிழக அரசே நடத்தலாம் என்று முதலமைச்சருக்கு அறிவுறுத்தியிருந்தேன். 26.10.2023-ஆம் நாள் சென்னையில் பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கத்திலும் இதே கருத்தை நானும், வல்லுனர்களும் வலியுறுத்தினோம்.

இவ்வளவு கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகும், இணைய இதழ் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த முதலமைச்சரிடம், ‘‘ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே நடத்த வேண்டும் என சில தலைவர்கள் கூறி உள்ளனர். இது சாத்தியமா? தமிழ்நாடு அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வாய்ப்பு உள்ளதா?’’ என்று கேட்ட போது, ‘‘ஒன்றிய அரசு எடுக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புதான் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுமைக்கும் சமூகநீதி கிடைக்க வழி வகுக்கும். ஆகவேதான் ஒன்றிய அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளேன்’’ என விடையளித்திருக்கிறார். இந்த விடையைப் பார்க்கும் போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்த மாநில அரசின் அதிகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை அல்லது உணர்ந்திருந்தும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இரு விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலாவதாக, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது; அது சாதிவாரியாக மக்களை பிளவுபடுத்தும் முயற்சி என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களே கூறியிருக்கிறார். இத்தகைய சூழலில் எந்த நம்பிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள்?

இரண்டாவதாக, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது; அத்தகைய கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க முடியாது? என்று பிகார் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தெள்ளத் தெளிவாக கூறிவிட்டன. இது போன்ற கணக்கெடுப்புகளை நடத்துவதற்காகவே புள்ளியியல் சட்டம் ஒன்றையும் 2008-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியுள்ளது. இவ்வளவுக்கு பிறகும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்?

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான சிக்கலில் தமிழக அரசின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் பார்க்கும் போது, சமூகநீதிக்கு எதிரான சக்திகளால் முதலமைச்சர் தவறாக வழி நடத்தப்படுகிறாரோ? என்று ஐயப்படத் தோன்றுகிறது. அண்டை மாநிலங்களின் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தாலே சாதிவாரி கணக்கெடுப்புக் குறித்த களநிலவரங்களை புரிந்து கொள்ள முடியும். ஆந்திரத்தில் வரும் 15-ஆம் நாள் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். கர்நாடகத்தில் 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களை அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நவம்பர் மாதம் தாக்கல் செய்யும்போது அதை தமது அரசு ஏற்று, செயல்படுத்தும் என்று முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருக்கிறார். ஒதிசா மாநிலத்தில் ஏற்கனவே சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன. ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் தான் சமூக நீதி வழங்க முடியும் என்றால், தமிழகத்தைச் சுற்றியுள்ள இந்த மாநிலங்கள் எதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகின்றன? என்பதை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விளக்குவாரா?

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்கனவே மூன்று முறை கிடைத்தன. ஆனால், மூன்று முறையும் அந்த வாய்ப்புகளை தமிழக அரசு தவறவிட்டுவிட்டது. அந்த தவறுகளுக்கு தீர்வு காணும் வகையிலாவது இப்போது தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினை நடத்தவேண்டும்.

சமூகநீதி வழங்குவதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு தான் அடிப்படை என்பதில் முதலமைச்சருக்கும், பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மாறுபட்ட கருத்து அல்ல. அந்தக் கணக்கெடுப்பை யார் நடத்துவது என்பதில் தான் கருத்து முரண்பாடு. மத்திய அரசு ஒருபோதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தப் போவதில்லை. இலவு பழுக்கும் என்று தமிழக அரசு காத்திருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். அதுவரை சமூகநீதி நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க முடியாது. எனவே, இந்த சிக்கலில் பிடிவாதம் காட்டாமல், கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விடாமல் தமிழ்நாட்டில் மாநில அரசின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; சமூகநீதியை காக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply