மணிப்பூர் சங்காய் திருவிழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

மணிப்பூர் சங்காய் திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோதி, காணொலி காட்சி மூலம் இன்று உரையாற்றினார். இந்த மாநிலத்தின் மிகவும் பிரபலமான இந்த திருவிழா, மணிப்பூரை, உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மாற்ற உதவும். மணிப்பூரின் மாநில விலங்கான சங்காய் ரக மானின் பெயரிலேயே இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த வகை மான்கள் மணிப்பூர் மாநிலத்தில் மட்டுமே காணப்படுகின்றன.

விழாவில் கூடியிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், மணிப்பூர் சங்காய் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தியதற்காக அம்மாநில மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகளுக்குப் பின் இந்த திருவிழா நடத்தப்படுவதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.  மணிப்பூர் மக்களின் உன்னதத்தை எடுத்துரைப்பதே மணிப்பூர் சங்காய் திருவிழா எனப் புகழாரம் சூட்டிய பிரதமர்,  இந்த திருவிழாவை நடத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்ட மாநில அரசுக்கும், முதலமைச்சர் என். பிரேன் சிங்கிற்கும் பாராட்டு தெரிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தின் அபரிமிதமான இயற்கை அழகு, கலாச்சார எழில், பல்லுயிர் பெருக்கம் ஆகியவை, நாம் அனைவருமே இந்த மாநிலத்திற்கு ஒரு முறையாவது சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுவதாகவும், இது விதவிதமான ரத்தினங்களால் ஆன எழில்மிகுந்த வரவேற்பு மாலையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவைக் கொண்டாடிய இவ்வேளையில், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற  குறிக்கோளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல இவ்விழா உதவும் என பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இந்த திருவிழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த நிறுவனம், வரும் நாட்களில், இந்தியாவின் ஆற்றல் மற்றும் உத்வேகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார். சங்காய் என்பது மணிப்பூரின் மாநில விலங்கு மட்டுமல்ல, இந்தியாவின் உண்மை மற்றும் நம்பிக்கைக்கு சிறப்பிடம் அளிக்கும் விலங்காகத் திகழ்வதாகவும் திரு. நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

சங்காய் திருவிழா இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தைக் கொண்டாடும் திருவிழா எனக் குறிப்பிட்ட அவர், இந்தியா இயற்கையுடன் கொண்டுள்ள  கலாச்சாரம் மற்றும் ஆன்மீக உறவுகளைக் கொண்டாடும் திருவிழா என்றும் கூறினார்.

நீடித்த நிலையான வாழ்க்கை முறைக்கு நம்மை அழைத்துச் செல்லும் சமூகப் பொறுப்புணர்வை அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இயற்கை, விலங்குகள் மற்றும் தாவரங்களை மையமாகக் கொண்டு திருவிழாக்களைக் கொண்டாடும்போது, அதன் சங்கமம், இயற்கையையும், நம்வாழ்வின் அங்கமாக மாற்றிவிடுகிறது என்று அவர் கூறினார்.   

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply