ஸ்ரீரங்கம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.

ஸ்ரீரங்கம் கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயிலில் சிவராத்திரி விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றது. வழிப்பாட்டின் சிறப்பு அம்சமாக மஞ்சளால் ஆன 1008 லிங்கம் மற்றும் 1008 அகல் விளக்கு ஏற்றி பெண்கள் பக்தி பரவசத்துடன் வழிப்பட்டனர். மேலும், மீனாட்சி சுந்தரரேஸ்வரருக்கு வெண்ணையால் அலங்காரம், கன்னிகா பரமேஸ்வரிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் மற்றும் உலக நன்மைக்காக ருத்ரஜப ஹோமம் ஆகியவை நடைப்பெற்றது.

‘மஹா சிவராத்திரி’ என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தி திதியில் இரவில் கொண்டாடப்படுவது வழக்கம். சிவராத்திரி விரத முறைகளை  ‘மஹா சிவராத்திரி கற்பம்’ என்னும் சிறிய புத்தகத்தில் காணலாம்.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

 1. நித்திய சிவராத்திரி

2. மாத சிவராத்திரி

3. பட்ச சிவராத்திரி

4. யோக சிவராத்திரி

5. மஹா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் முதல் ஒரு நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.

அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடைய வேண்டும் என்று பிராத்தித்தார்.

இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், ஹாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply