பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி பெண்ணை, தனது ஹெலிகாப்டரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஆளுநர்!

அருணாச்சல பிரதேச ஆளுநர் பிரிகேடியர் பி டி மிஸ்ரா.

அருணாச்சல பிரதேச ஆளுநரும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான பிரிகேடியர் பி டி மிஸ்ரா.  தவாங் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். தொடர்ந்து முதல்வர் பெமா காண்டு மற்றும் அங்கு இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது, கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் துடிப்பதாகவும், அருகில் உள்ள கவுகாத்தி – தவாங்க் இடையிலான ஹெலிகாப்டர் சேவை 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டுவிடம், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

இதனையடுத்து, ஆளுநர் மிஸ்ரா, அந்த கர்ப்பிணி பெண்ணையும், அவரின் கணவரையும் தனது ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக கூறினார். தன்னுடன் வந்த அதிகாரிகளை தவாங்க் நகரில் தங்க உத்தரவிட்டார்.

கர்ப்பிணி பெண்ணை அழைத்து சென்ற ஹெலிகாப்டர், அசாமின் தேஜ்பூரில் எரிபொருள் நிரப்ப தரையிறக்கப்பட்டது. எரிபொருள் நிரப்பிய பின்னர், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு வலி அதிகரிக்கவே, தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தை தொடர்பு கொண்டு, விமானப்படை ஹெலிகாப்டரை வரவழைத்து, அந்த பெண்ணையும், கணவரையும் இடா நகருக்கு ஆளுநர் மிஸ்ரா அனுப்பி வைத்தார்.

இடா நகரில் ஹெலிகாப்டர் தரையிறங்கிய பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் ஒன்றையும், மருத்துவர் ஒருவரையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்த ஆளுநர் மிஸ்ரா, வேறொரு ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் சென்றார்.

அந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. இதனையறிந்த ஆளுநர் மிஸ்ரா, மருத்துவமனைக்கு நேரில் சென்று தாய், சேய் இருவரின் நலம் குறித்து விசாரித்தார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply