இந்தியாவை எம்மை விட்டு தூரமாக்குவதற்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் ரணில் விக்ரமசிங்ஹ செயற்பட்டார்!-இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பகிரங்க குற்றச்சாட்டு.

இலங்கையில் “நாட்டை பாதுகாக்கும் மக்கள் மகிமை” என்ற மக்கள் சந்திப்பு பேரணி நடைப்பெற்றது. இதில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக நின்று மக்களை சந்தித்தனர்.

இப்பேரணியில் இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரையின் தமிழாக்கம், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.

நான்கு வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒரே மேடையில் இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். நண்பர்களே நவம்பர் மாதம் இலங்கையில் ஒரு முக்கியமான மாதம். 2014 ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் திகதி நான் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்திலிருந்து விலகினேன். நான்கு வருடங்களுக்கு பின்னர் 2018 நவம்பர் மாதம் மீண்டும் இந்த மேடையில் ஒன்றாக சந்திக்கின்றோம்.

இந்த நாட்டில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்ஹவை அப்பதவியிலிருந்து நீக்கியதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் நியமித்ததும் ஏன்? இதன் நோக்கம் என்ன? இதன் மூலம் எதிர்ப்பார்க்கப்படுவது என்ன? இதனால் ஏற்பட்டது என்ன? ஏற்பட வேண்டியது என்ன? இந்த கதிரைக்கு மாற்றப்பட்டிருப்பது இரண்டு உடம்புகளையோ இரண்டு மனிதர்களையோ அல்ல. இதன் மூலம் மாற்றப்பட்டிருப்பது இந்த நாட்டுக்கும் தேசத்திற்கும் எமக்கும் பொருத்தமற்ற, எமது கலாசார பாரம்பரியங்களை புரிந்துகொள்ளாத, பாரம்பரியத்தை மதிக்காத, வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படும் கொள்கையையே நாம் பிரதமர் கதிரையிலிருந்து நீக்கியிருக்கிறோம் என்பதை நான் உங்களுக்கு தெளிவாக கூறவேண்டும்.

அப்படியானால் இந்த கதிரைக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றவர் யார்? இந்த கதிரைக்கு நியமிக்கப்பட்டவர் எமக்கும் நாட்டுக்கும் பொருத்தமான, தேசியக் கலாசாரத்தை அறிந்து, எமது பாரம்பரியங்களை மதிக்கின்ற, வெளிநாட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலை புறக்கணிக்கின்ற உங்களுடையவும் எங்களுடையவும் உண்மையான மனிதரான மஹிந்த ராஜபக்ஷவேயாவார். எனவேதான் இது ஆட்களை மாற்றுதல் என்பதைப் பார்க்கிலும் வேறுபட்ட விரிந்த அர்த்தத்தை கொண்டதாகும் என கூறினேன். இது அரசியல் ரீதியாக நாட்டுக்கு செய்யப்படவேண்டிய ஒன்றாகும்.

இன்று இங்கிருக்கும் நீங்கள் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அல்ல. நீங்கள் என்னை மன்னித்து இந்த விடயங்களை கூறுவதற்கு எனக்கு இடமளிக்க வேண்டும். இந்த நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியை நேசிக்கின்ற டி.எஸ்.சேனாநாயக்கவின் கொள்கையையும் டட்லி சேனாநாயக்கவின் கொள்கையையும் மதிக்கின்ற இந்த நாட்டின் தெளிவான சமூக, அரசியல் மாற்றத்தின் வரலாற்றைக்கொண்ட முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத்துவத்தை அன்று பாதுகாத்த தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து இன்றைய தலைவர்களுக்கு பின்னால் செல்லும் இந்த நாட்டின் அன்பான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களே நான் கூறும் இந்த விடயத்தை கேளுங்கள்.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் நியமித்ததைப்பற்றி 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி சுமார் 62இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் என்னை ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்வதற்கு தலைமை வகித்த இந்த நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் என்னிடம் கேட்கின்ற ஒரு கேள்வியுள்ளது. இந்த கேள்வியை நான்கு நாட்களுக்கு முன்னர் எனது நண்பர் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவும் என்னிடம் கேட்டார். கரு ஜயசூரிய அவர்களை நான்கு நாட்களுக்கு முன்னர் நான் சந்தித்து பேசினேன். நான் அவருடன் இந்த மாற்றத்திற்கான காரணத்தை சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். எனது பேச்சை கேட்டுக்கொண்டிருந்ததன் பின்னர் கரு ஜயசூரிய அவர்களும் இதனை என்னிடம் கேட்டார், அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்காக என்னை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் இந்த கேள்வியை கேட்டனர். இந்த கேள்வியை இந்த நாட்டிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களும் என்னிடம். கேட்கின்றனர். என்ன அந்த கேள்வி? ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்புடன் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட உங்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பதை விடுத்து வேறு ஒரு மாற்றுவழி கிடைக்கவில்லையா? என்பதே அந்த கேள்வியாகும். நான் தெளிவாக கூறவேண்டும். சபாநாயகர் என்னிடம் இந்த கேள்வியை கேட்டபோது நான் அவரிடம் சபாநாயகர் அவர்களே உங்களுக்கு நினைவிருக்கின்றதா? 08 மாதங்களுக்கு முன்னர் இந்த மாற்று வழியை உங்களிடம் நான் முன்வைத்தேன். நண்பர்களே! நீங்கள் வாக்களித்து வெற்றிபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் ரணில் விக்ரமசிங்ஹவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பின்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களிடம் நான் கூறினேன். எனக்கு ரணில் விக்ரமசிங்ஹவின் கொள்கை மற்றும் செயற்பாடுகள் பிடிக்கவில்லை. அவருடன் எனக்கு பணியாற்ற முடியாது. எனவே கரு ஜயசூரிய அவர்களே நீங்கள் பிரதமர் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் கூறினேன்.

மூன்று நாட்களுக்கு பின்னர் கரு ஜயசூரிய அவர்கள் ஜனாதிபதி அவர்களே உங்களது கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன் நாளைய தினம் சந்திக்க முடியுமா என்று கேட்டார். அடுத்த நாள் மாலை 05 மணிக்கு சந்திப்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. என்னை சந்திப்பதற்கு தனியாக வருவதாக கூறிய கரு ஜயசூரிய அவர்கள், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவுடன் எனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்தார். ஐயோ எனக்கு இந்த பிரதமரை எதிர்த்து நிற்க முடியாது எனக் கூறினார்.

இந்த உரையை கேட்டுக் கொண்டிருக்கும் அன்புக்குரிய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களே நான் அந்த முயற்சியை அத்துனுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்த முயற்சியின் அடுத்த கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எனது வீட்டுக்கு அழைத்து உங்களது தலைவர் பொருத்தமற்றவர். இந்த கொள்கை நாட்டுக்கு பொருத்தமற்றது. அவருடன் எனக்கு பணியாற்ற முடியாது. நான் கரு ஜயசூரியவிடமும் கூறினேன். அவரும் பின்வாங்கி விட்டார். நாம் ரணில் விக்ரமசிங்ஹவை நீக்கி விடுவோம் நீங்கள் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் சஜித்திடம் கூறினேன். கரு ஜயசூரியவை போன்றே சஜித் பிரேமதாசவும் ஐயோ தலைவரை எதிர்ப்பதற்கு என்னால் முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே, நான் நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ஒருவரை பற்றி யோசித்தேன். எனவே நாட்டுக்கு பொருத்தமான தலைவர் ஒருவரை பற்றி தீர்மானத்தை மேற்கொண்டேன். இந்த நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் புரிந்துகொண்ட, அவற்றை மதிக்கின்ற, நாட்டை நேசிக்கின்ற என்னுடன் ஜனநாயக ரீதியான பயணமொன்றை மேற்கொள்வதற்கு எனக்கு பொருத்தமான ஒருவரை தேடினேன். கரு ஜயசூரியவும் சஜித் பிரேமதாசவும் முடியாது எனக் கூறிய பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்ஹவை எதிர்த்து நிற்க முடியாது எனக் கூறிய பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக தெரிவுசெய்தேன் என்பதை கூறவேண்டும்.

வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நாம் செயற்பட முடியாது. கடந்த மூன்றரை வருடங்களுக்கும் அதிகமான காலம் இந்த நாட்டின் அப்பாவி மக்களை பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாக்கியது ரணில் விக்ரமசிங்ஹவின் பொருளாதார, அரசியல் கொள்கையாகும். மேல் வர்க்கம் மட்டும் சுகம் அனுபவிக்கும் நிலைக்கு அதனை அவர் மாற்றினர். சுதேச மக்களின் சுதேச கலாசார பாரம்பரியங்களை அவர் நிராகரித்தார். தேசியத்திற்கு மதிப்பளிக்காது வெளிநாட்டு சிந்தனைகளினால் புதிய தாராண்மைவாத அரசியல் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பித்தார். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலாய், பறங்கிய மக்களின் கலாசார பாரம்பரியங்களின் ஐக்கியம் அவருக்கு மறந்து போய்விட்டது.

நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பது அவருக்கு மறந்து போனது. நாட்டின் தீர்மானங்களை மேற்கொண்டது அமைச்சரவையல்ல. அரசாங்கத்தின் தீர்மானங்களை மேற்கொண்டது ஆளுங்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களல்லர். அரசாங்கத்தின் தீர்மானங்களை மேற்கொண்டது ஜனாதிபதியோ பிரதமரோ அல்ல. அரசாங்கத்தின் தீர்மானங்களை மேற்கொண்டது ரணில் விக்ரமசிங்ஹவும் அவருக்கு நெருக்கமானவர்களுமே ஆகும்.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டது முதல் இதுவரை அனைத்து மகாநாயக்க தேரர்களையும் சந்தித்துள்ளார். அதேபோன்று மெல்கம் ரஞ்சித கார்டினல் அவர்களையும் சந்தித்தார். ஜயஸ்ரீ மகா போதிக்கு சென்று சமய கிரியைகளில் ஈடுபட்டார்.

மகாநாயக்கர்களை சந்திக்க ரணில் விக்ரமசிங்ஹ சென்றாரா? ஸ்ரீ மகா போதிக்கு சென்றாரா? கார்டினல் அவர்களை சந்திக்க சென்றரா? நான் தெளிவாக கூற வேண்டும். எனது அரசியல் வாழ்க்கை 51 வருடங்களை எட்டியிருக்கின்றது. அந்த அனுபவம், அறிவு மற்றும் தெளிவுடன் நான் தனியாக தீர்மானங்களை மேற்கொண்டது கிடையாது.

இந்த மாற்றத்தை மேற்கொள்கின்றபோது சட்ட நிபுணர்கள், முதிர்ச்சி வாய்ந்த அரசியல் தலைவர்கள், இந்த விடயம் குறித்து விரிவான அறிவைக்கொண்டுள்ள நிபுணர்கள், எமது அரசியல் அமைப்பு பற்றி அறிந்த நிபுணர்கள் ஆகியோரோடு கலந்துரையாடி அவர்கள் அனைவருடையவும் ஆலோசனையின் பேரிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசியலமைப்பிற்கும் சட்டத்திற்கும் அமைவாகவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்ஹ அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய அமைச்சரவை செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் அமைவாகவே இந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி உங்களுக்கும் இது பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்ற அனைவருக்கும் நான் கூறிக்கோள்கிறேன்.

இந்த விடயம் பற்றி ஏதேனும் சட்ட ரீதியான பிரச்சினை இருக்குமானால் இந்நாடு ஜனநாயக நாடு என்ற வகையில், சட்டத்தை மதிக்கும் நாடு என்ற வகையில் பக்கசார்பற்ற நீதிமன்றத்தை கொண்டுள்ள நாடு என்ற வகையிலும் எந்த ஒருவரும் உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு வழிகள் உள்ளன.

எனவே, நாம் பாராளுமன்றத்தை பலப்படுத்துவோம். 113-ஐப் பற்றி சந்தேகப்பட வேண்டாம். 113 உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. பாராளுமன்றத்தை பலப்படுத்தி எமது அரசியல் கொள்கையின் படி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு இடமளிக்குமாறு நான் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கிறேன். இந்த மக்கள், கற்ற இளந்தலைமுறை, உழைக்கும் மக்கள், அரசாங்க ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள் ஆகிய அனைவரையும் ரணில் விக்ரமசிங்ஹவின் இந்த பொருளாதார கொள்கையிலிருந்து விடுவிக்க வேண்டும்.

இளநீர் விற்பனை செய்கின்ற மனிதர் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட இலாப சீட்டு விற்கின்றவர், பாதையோரத்தில் பழங்கள் விற்கின்றவர் மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு எதிராக நான் மூன்று வருடங்களுக்கும் மேலாக போராடினேன். இவற்றில் ரணில் விக்ரமசிங்ஹவின் முயற்சி சர்வதேசத்திற்கு பிழையான கருத்துக்களை வழங்குவதாகவே இருந்தது. என்றாலும் எமக்கு இருந்த பெரிய பலம் சட்ட ரீதியாகவும் அரசியல் அமைப்பிற்கு அமைவாகவும் சரியாகவும் இந்த அனைத்து விடயங்களும் செய்யப்பட்டிருப்பதைப்போன்று இந்த தீர்மானத்தில் எமது மிகப்பெரும் பலம் நாட்டின் பொதுமக்களில் பெரும்பான்மையானவர்கள் நூற்றுக்கு எண்பது வீதமானவர்கள் இந்த தீர்மானத்தை அங்கீகரித்து எம்முடன் இருப்பதாகும். எனவே மக்கள் பலத்துடன் விளையாட வேண்டாம். ரணில் விக்ரமசிங்ஹ அவர்களே மக்களின் விருப்பத்தை, மக்களின் மனச்சாட்சியை புரிந்துகொண்டு செயற்படுங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

நாங்கள் செய்ய வேண்டிய மாற்றத்தை மிகத் தெளிவாக மேற்கொள்வோம். அதேபோன்று நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதைப்போன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நானும் புதிய அரசாங்கம் என்ற வகையில் வடக்கு மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளோம் என்பதை நான் உங்களுக்கு தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைச்சரவையில் நடவடிக்கையை எடுத்தபோது எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டன என்பது கடந்த மூன்று நான்கு வருடங்களாக அமைச்சரவையிலிருந்த அமைச்சர்களுக்கு தெரியும்.

வடக்கில் அப்பாவி மக்களுக்காக 50ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு உரிமையாளர்கள் யார்? என்று மூன்றரை வருடங்களாக அமைச்சர்களுக்கிடையே இழுபறி இருந்து வந்தது. ஒரு வீட்டையேனும் அமைக்கவில்லை. வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த 50ஆயிரம் வீட்டுத் திட்டத்திற்கு பாரிய நிதி கிடைக்கப் பெற்றிருந்தது அந்த நிதியை உரிமையாக்கிக்கொள்ள ரணில் விக்ரமசிங்ஹ அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இந்த பிரச்சினையில் மூன்றரை வருடங்களாக ஒரு வீட்டையேனும் அமைக்க முடியவில்லை.

எனவே, நான் மிகவும் தெளிவாக கூறிக்கொள்கிறேன். நான் முன்னெடுத்திருப்பது ஒரு தூய்மையான நிகழ்ச்சித் திட்டமாகும். முழுநாடுமே ஏற்றுக்கொண்டுள்ள நிகழ்ச்சித் திட்டமாகும். சர்வதேசம் ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டமாகும். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அண்மையில் எம்முடன் உரையாடினார். அவருக்கு நான் இந்த நியமனங்கள் தொடர்பாக விளக்கிக் கூறினேன். அவர் என்னிடம் நீங்கள் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காக மேற்கொள்ளும் தீர்மானங்களில் நாம் உங்களுக்கு தெளிவாக ஒத்துழைப்போம் எனக் கூறினார். அது தொடர்பில் எமக்கு பிரச்சினைகள் கிடையாது எனக் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற வகையில் மிகத் தெளிவாக எமக்கு கிடைத்த அந்த ஆசீர்வாதத்தை நான் மிகவும் மதிக்கிறேன்.

எமது மிக நெருங்கிய நட்பு நாடான, 1000 வருடங்களாக உறவுகளை கொண்டுள்ள இந்தியாவை என்னை விட்டும் தூரமாக்குவதற்கு ரணில் விக்ரமசிங்ஹவின் அணி போலியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றது. என்னை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி முயற்சி வெளியானதை தொடர்ந்து அதன் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சரவைக்கு நான் முன்வைத்த விடயங்களை பிழையாக, இரகசியமாக ஊடகங்களுக்கு வழங்கி, இந்தியாவை எம்மை விட்டும் தூரமாக்குவதற்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் ரணில் விக்ரமசிங்ஹ அவர்களும் அவரது அணியினரும் செயற்பட்டனர்.

என்றாலும் நான் மிகவும் தெளிவாக கூறிக்கொள்கிறேன். எமக்கு பௌத்த தத்துவம் இந்தியாவிலிருந்தே கிடைத்தது. 1000 வருட பொருளாதார, கலாசார உறவுகள் எமக்கு இந்தியாவுடன் உள்ளது. எமது வெளிநாட்டுக் கொள்கையில் உலகின் அனைத்து நாடுகளுடனும் ஏற்படுத்திக் கொண்டுள்ள அணிசேரா வெளிநாட்டு கொள்கையில் இந்தியாவுடனான நட்பை பலப்படுத்துவதற்கு நான் எப்போதும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை மிகத் தெளிவாக இந்த சந்தர்ப்பத்தில் கூற வேண்டும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்ததொரு நாட்டை கட்டியெழுப்புவோம். நல்லதொரு பயணத்தை மேற்கொள்வோம். நாம் எமது குறைகளை சரி செய்து கொள்வோம். இந்த நாட்டிலுள்ள அப்பாவி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம். சுபீட்சமானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் சமாதானத்தை பலப்படுத்தி பொதுச்சொத்துக்களையும் தேசிய வளங்களையும் பாதுகாத்து இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மையை அகற்றி அனைவரும் சமாதானத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். எந்தவொரு பிரச்சினையையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம். பொதுச்சொத்துக்களையும் தேசிய வளங்களையும் பாதுகாருங்கள். அரசியல் ரீதியாக எதிர்நிலைப்பாடுகளை கொண்டுள்ளவர்களுடன் அன்பாக பேசுங்கள். அவர்களுக்கு விடயங்களை தெளிவுபடுத்துங்கள்.

பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷவுடனும் புதிய அமைச்சரவையுடனும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் மகா சங்கத்தினர், ஏனைய சமய தலைவர்களின் வழிகாட்டலில் எமது கலாசார பாரம்பரியங்களுக்கும் மரபுரிமைகளுக்கும் பெறுமானத்தை வழங்கி எமது அன்புக்குரிய தாய்நாட்டை கட்டியெழுப்புவோம். அதனை பலப்படுத்தி முன்னேறிச் செல்வோம்.

இறுதியாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு நான் சில விடயங்களை கூற விரும்புகிறேன். சபாநாயகர் அவர்களே நீங்கள் சிறந்ததோர் சிங்கள பௌத்த தலைவர். நீங்கள் கௌரவ மகா சங்கத்தினருடன் நெருங்கிப் பழகுகின்ற ஒருவர். சிறந்ததோர் வாழ்க்கையை முன்னெடுக்கின்ற ஒருவர். எனவே எமது கௌரவ மகா நாயக்க தேரர்களின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளுங்கள். அதேபோன்று ஏனைய சமய தலைவர்களினதும் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளுங்கள். ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையில் அமைதியை பாதுகாருங்கள். சட்ட ரீதியாக அரசியலமைப்பிற்கு அமைவாக நான் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி ஜனநாயக தலைவர் என்ற வகையில் அப்பாவி மக்கள் மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்தாது எமது நேசத்திற்குரிய தாய்நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம்.

உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும், நான் முன்நோக்கி வைத்த எட்டை, நான் மேற்கொண்ட தீர்மானத்தை முன்நோக்கி கொண்டு செல்வேனேயல்லாது பின்நோக்கி செல்லமாட்டேன் எனக் கூறி விடைபெறுகிறேன்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply