மனிதமுக விநாயகரை வழிபடும் கிராம மக்கள்!

சேலம் மாவட்டம், ஏற்காடு, மாரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தொல்குடிகளின் பண்பாட்டை அறியும் பொருட்டு, ஏற்காடு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஏற்காடு இளங்கோ, பிலியூர் ராமகிருஷ்ணன், ஓவியர் ராஜ கார்த்திக், ஜெகதீஷ், வெங்கடேசன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் புதிய கற்கால கருவிகளுக்க நடுவில் மனிதமுக விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தவது கண்டறிந்தனர்.

இது குறித்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

“ஏற்காடு மலை கிராமமான நார்த்தஞ்சேடு கிராமத்தில் அமைந்துள்ள மனித முக விநாயகர் சிலை மிகவும் பழமையானது. இச்சிலையில் விநாயகருக்கு மூக்கும், வாயும், உள்ளது. மேலும், தாடையில் இருந்து துதிக்கை இடது கை நோக்கி நீண்டிருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் மனித முகம் கொண்ட விநாயகர் சிலை இங்கு மட்டுமே காணப்படுவது சிறப்பாகும்.

மேலும், இச்சிலையை சுற்றி முப்பதுக்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் குவிந்துள்ளது. இவற்றையும் மக்கள் வணங்குகின்றனர்.

மேலும், செந்திட்டு கிராமத்தில் உள்ள விநாயகர் சிலை 30 செ.மீ நீள் வட்ட வடிவத்திலும், 60 செ.மீ உயரமும் கொண்டுள்ளது. சிலையை நன்கு தேய்த்து கும்ப வடிவத்திலும், அருவ வடிவில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருவ விநாயகரே ஏற்காட்டின் மூத்த விநாயகர் சிலையாகும். முதன்மையானதும் இதுவே. இங்கிருந்தே ஏற்காட்டின் பிற இடங்களுக்கு விநாயகர் உருவ வழிபாடு பரவியிருக்க வேண்டும்.

இந்த சிலையை சுற்றிலும் 40-க்கும் மேற்பட்ட புதிய கற்கால கருவிகள் காணப்படுகிறது. எனவே, இங்கு 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 

-நவீன்குமார்.

 

Leave a Reply