மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

Mettur_damMettur_dam.jpg30கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி அவற்றில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. காவிரியில் திறக்கப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.


இதனால் கடந்த ஜுன் மாதம் 25-ந் தேதி 15.51 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவு 100 அடியை தாண்டியது. அணைக்கு கடந்த 4 நாட்களாக 70 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டமும் உயர்ந்து கொண்டே வருகிறது.

நேற்று காலை 100.80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 104.65 அடியாக உயர்ந்தது. பிற்பகலில் 105 அடியை எட்டும் என எதிபார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் அணையின் நீர்மட்டம் 74.65 அடியாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. மேட்டூர் அணைக்கு நேற்று 88 ஆயிரத்து 984 கன அடி தண்ணீர் வந்தது.

இன்று காலை இந்த அளவு குறைந்து 61 ஆயிரத்து 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கர்நாட காவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது மழை குறைந்ததை யொட்டி கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகேனக்கல் பிலி குண்டுலு பகுதியில் 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து நேற்று முன்தினம் வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீரும் நேற்று 76 ஆயிரம் கன அடி தண்ணீரும் வந்தது. இன்று மேலும் குறைந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அருவிக்கு செல்லும் நடை பாதையில் 1 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தினை தர்மபுரி கலெக்டர் விவேகானந்தன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் ஆடிப்பெருக்கு விழாவிற்காக நடைபெறும் பணிகளை அவர் பார்வையிட்டார்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் நீர்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் மின் உற்பத்தி 60 மெகாவாட்டில் இருந்து 100 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காகவும் ஆடிப் பெருக்கு விழாவுக்காகவும் 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (29.07.2013) முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று இரவு முதல் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது மொத்தம் 10 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் அணையையொட்டி அமைந்துள்ள தங்கமாபுரி பட்டணம், மற்றும் பூலாம்பட்டி காவிரி கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் நகராட்சி மூலமும் வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

 

Leave a Reply