என்.எல்.சி. பங்குகள் தமிழகத்துக்கு ரூ.500 கோடிக்கு விற்பனை!

Neyveli-Lignite-Corpjayalalithaa tn.cm

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) பங்குகளை தமிழக அரசுக்கு ரூ.500 கோடிக்கு விற்க இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனைகள் வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

மும்பையில் செபி அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக் குழுவுக்கும் இடையே 15.07.2013 திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எட்டப்பட்டது. இந்தத் தகவலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். தனது தலைமையிலான அரசின் நடவடிக்கையின் மூலம் என்.எல்.சி. பங்குகள் தனியாருக்கு விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் நிதித் துறை முதன்மைச் செயலாளர், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர், தொழில் துறையின் இணைச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்துக்குப் பிறகு, என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யவும், அதனால் பொது வைத்திருப்பாக வகைப்படுத்தப்படும் முதலீடு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அளவான 10 சதவீதத்தை நிறைவு செய்யும் என்பதால் மத்திய அரசும், செபி நிறுவனமும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களான தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் ஆகியன நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை சுமார் ரூ.500 கோடி கொடுத்து வாங்கும்.

என்.எல்.சி. பங்குகளை தனியாருக்கு விற்கும் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த மே 23-ஆம் தேதி கடிதம் எழுதினேன். தமிழகத்தில் தொழிலாளர் போராட்டம் வெடிக்கும் எனவும், மின் தடை ஏற்பட்டு தமிழகத்தின் நலன் பாதிக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

இதற்குப் பதிலளித்த பிரதமர், செபியின் கொள்கைப்படி 5 சதவீத பங்குகளை விற்பதைத் தவிர மத்திய அரசுக்கு வேறு வழியில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்தப் பிரச்னைக்கு சாத்தியமாகக் கூடிய தீர்வினைக் காண வேண்டும் என்ற அடிப்படையிலும், தொழிலாளர்கள் மற்றும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழக அரசுக்கு ஏற்படும் நிதிச் சுமையை பொருட்படுத்தாமல் என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தமிழக அரசின் அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டேன்.

எனது தொடர் வற்புறுத்தலையடுத்து, மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவு செய்து, அதுகுறித்து விவாதிக்க தமிழக அரசின் அதிகாரிகளை புது தில்லிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசுக் குழு கடந்த 10- ஆம் தேதி புது தில்லிக்குச் சென்று மத்திய அரசு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

பங்குகளை வாங்கும் தகுதியுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து என நிர்ணயம் செய்யவும், மொத்தம் உள்ள 5 சதவீத பங்குகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு (டிட்கோ) 25 சதவீத பங்குகள், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்துக்கு (சிப்காட்) 45 சதவீத பங்குகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (டிக்), தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழகம் (டுபிட்கோ), தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் (பவர்பின்) ஆகியவற்றுக்கு தலா 10 சதவீத பங்குகள் என்ற அடிப்படையில் ஒதுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

விலை என்ன? பங்குச் சந்தையின் இரண்டு வார அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச விலையின் சராசரியை அடிப்படையாக வைத்து விலையை நிர்ணயம் செய்யவும், 6.44 சதவீத பங்குகள் ஏற்கெனவே பொது முதலீட்டில் உள்ளதால், 5 சதவீதம் என்பதற்குப் பதிலாக 3.56 சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மும்பையில் 15.07.2013 திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் என்.எல்.சி.யின்  பங்குகளை சுமார் ரூ.500 கோடிக்கு தமிழக அரசு வாங்குவதற்கு செபி ஒப்புதல் அளித்தது என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply