எடியூரப்பா காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டார் : கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர்

karnataka cmசி.பி.ஐ., வழக்கிற்கு அஞ்சிக்கொண்டு காங்கிரஸ் கட்சியின் கைப்பாவையாக மாறிவிட்டார் எடியூரப்பா என்று  கர்நாடக முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர் குற்றம் சாட்டினார்.

குல்பர்காவில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: எடியூரப்பா மீதான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆட்டத்திற்கு தகுந்தபடி எடியூரப்பா ஆடி வருகிறார். சிபிஐ வழக்கை எதிர்கொள்ள தைரியமில்லாமல் அஞ்சி நடுங்குகிறார் எடியூரப்பா. இந்த காரணத்திற்காகவே, பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய  வைத்து அரசியல் குழப்பத்தை உருவாக்க எடியூரப்பா முயற்சிக்கிறார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரித்து வருகிறார். புதிய கட்சி தொடங்கியுள்ள எடியூரப்பா, தேசிய கட்சி ஒன்றுக்கு வாக்கு சேகரிப்பது வெட்கக்கேடானது. காங்கிரஸ் கட்சியுடன் கர்நாடக ஜனதா கட்சி ரகசிய கூட்டு வைத்துள்ளதை நிரூபிக்க இது ஒன்றே போதும்.

பாஜகவில் இருந்து யார் விலகினாலும் கட்சிக்கோ, ஆட்சிக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. பாஜகவில் தலைவர்களுக்கு என்றும் குறைவிருந்ததில்லை. தொண்டர்களே கட்சியின் அடித்தளம். எனவே, உள்ளாட்சி மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்பதை அறுதியிட்டு கூறுகிறேன். கடந்த உள்ளாட்சி தேர்தலை காட்டிலும் இம்முறை அதிக இடங்களை பாஜக கைப்பற்றும். எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், மக்களிடையே பாஜகவிற்கு செல்வாக்கு இருப்பதை மறுக்க முடியாது.

கடந்த 5 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. எனவே, இம்முறையும் பாஜகவை ஆதரித்து மீண்டும் ஆட்சி அமைக்க மக்கள் வாக்களிப்பார்கள்.சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் என்னை அறிவித்துள்ளது. அதேபோல, முதல்வர் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் கட்சிக்கு தைரியமிருக்கிறதா? மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை கட்சி மேலிடம் அறிவித்தால், அதற்கு என் முழு ஆதரவும் உண்டு. நமது நாட்டின் பிரதமராவதற்கான எல்லா தகுதியும், திறமையும் நரேந்திரமோடிக்கு உள்ளது என்றார் அவர்.

Leave a Reply