ரெயில்வே பட்ஜெட்டில் சரக்கு கட்டணம் உயர்த்தப்படுவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும்: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து!

JJFரெயில்வே பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாராளுமன்றத்தில் இன்று வெளியிடப்பட்ட ரெயில்வே பட்ஜெட்டில் நாட்டின் கட்டமைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான எந்த ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளும் இல்லை.இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள லெவி கட்டண உயர்வு மற்றும் சரக்கு கட்டண உயர்வின் மூலம் ஏற்கனவே அதிக சுமையை தாங்கும் சராசரி மக்களின் மீது மேலும் அதிக சுமை சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும்.

தற்போதைய தேவைக்கேற்ப நிலையான நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முதலீட்டில் உயர்வு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. சரக்குகளை கையாளும் அதிவிரைவு சரக்கு நிலையம் போன்ற தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

மாறாக, இதுவரை மத்திய அரசும் ரெயில்வே துறையும் சந்தித்து வந்த புதிய வழித்தடங்கள், பயணிகள் பாதுகாப்பு, நடை மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கான செலவினங்கள் மாநில அரசுகளின் பக்கம் தள்ளப்பட்டுள்ளன. இது முற்றுலுமாக ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.

தற்போதைய நிலையில், சரக்கு கட்டணம் உயர்த்தப்படுவதால் பொருட்களின் விலை கடுமையாக உயரும். குறிப்பாக, உணவு தானியங்கள், சிமெண்ட், நிலக்கரி, இரும்புத் தாது போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும்.

இதன் வாயிலாக, ஏற்கனவே திண்டாடிக் கொண்டிருக்கும் மாநில மின்சாரத் துறைக்கு மேலும் அழுத்தம் அதிகரிக்கும். பல்வேறு துணை கட்டணங்களின் மூலம் மறைமுகமாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியாகும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்காக வழங்கப்படும் ஒதுக்கீட்டை ரெயில்வே அமைச்சகம் தனது தேவைக்காக திசை திருப்பிக் கொள்ளவும் முயற்சிக்கிறது.

இந்த முயற்சி மிகவும் நியாயமற்றதாகும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளின் முடிவெடிக்கும் அதிகாரங்களுக்கு முரணானதாகும். மேலும், பொதுமக்களால் அதிகம் உபயோகப்படும் சென்னை புறநகர் ரெயில் சேவையில் கூடுதலான ரெயில்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டுற்கு என அறிவிக்கப்பட்டுள்ள சொற்ப அளவிலான புதிய தடங்களும், ரெயில்களும் பல ஆண்டுகளுக்கு முன்னரே மாநில அரசால் கோரப்பட்டு, பலமுறை நிர்பந்திக்கப்பட்ட பழைய திட்டங்கள் தான். ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் போல் நீண்ட காலம் தாமதப்படுத்தாமல் இந்த புதிய திட்டங்களையாவது உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

ஒட்டு மொத்தமாக, தமிழ்நாடு அரசிடம் மத்திய அரசு வழக்கமாக காட்டி வரும் மாற்றான் தாய் மனப்பான்மையின் தொடர்ச்சியாகவே இந்த ரெயில்வே பட்ஜெட்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

சராசரி மக்களுக்கு வெறும் வார்த்தை ஜாலங்களை கூறி அறிவிக்கப்படாத சுமைகளை அவர்களின் மேல் சுமத்தும் விதமாகவே இந்த ரெயில்வே பட்ஜெட் அமைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply