வாழ்க்கையில் முன்னேறுவதற்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் தேவை

 .

நீலகிரி மாவட்டம் குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை பொன் விழாவில் முதலமைச்சர்  ஜெயலலிதா ஆற்றிய உரை

. 

           இமை கொட்டாமல் ரசிக்கும் இயற்கை  அழகை கொண்ட, இந்த நீலகிரிமாவட்டத்திற்குட்பட்ட குந்தாவில், உடலை வருடும் இதமான தென்றலுக்கும், வானத்தை தொடும் அளவு வளர்ந்திருக்கும் மரங்களுக்கும், காற்றோடு கலந்து வீசும் ரம்யமான யூகலிப்டஸின் நறுமணத்திற்குமிடையே குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையின் இந்த இனிய பொன்விழாவில் கலந்து கொண்டு, இண்ட்கோசர்வின் புதிய 250 கிராம் ஊட்டி டீ விற்பனை ஆவின் விற்பனையகங்களில் ஊட்டி டீ விற்பனை ஆகியவற்றை துவக்கி வைத்ததில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.  சிறு தேயிலை தொழில் துறையில்,  1930-களிலிருந்து தொடர்ந்து வளர்ச்சி காணப்பட்டது என்றாலும், சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்த தேயிலையை பெரும்பாலும் தனியார் தொழிற்சாலைகளுக்கு  விற்று வந்தனர்.  இதன் காரணமாக, சிறு தேயிலை விவசாயிகள்  தாங்கள் உற்பத்தி செய்த தேயிலைக்கு  குறைந்த விலையையே பெற்று வந்தனர்.  இது மட்டுமல்லாமல், அதிக தள்ளுபடி, எண்ணிக்கையில் முறைகேடு என பல்வேறு பிரச்சனைகளுக்கும் சிறு தேயிலை விவசாயிகள் ஆளாக்கப்பட்டனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், தனியார் தொழிற்சாலைகளின் தயவில் சிறு தேயிலை விவசாயிகள் வாழ்ந்து வந்தனர்.

Press Release

அறியாமை மற்றும் சமூக பொருளாதார நிலைமை காரணமாக, சிறு, குறு விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வந்தனர்.   “கூட்டுறவே நாட்டுயர்வு”, “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”  என்ற பழமொழிகளுக்கு ஏற்பவும்,  “தனி மனிதனுக்காக சமூகமும், சமுதாயத்திற்காக  தனி மனிதனும்”, என்ற கூட்டுறவுக் கொள்கையின் அடிப்படையிலும்  சிறு, குறு தேயிலை விவசாயிகளின் சமூக பொருளாதார நிலைமைகளை மாற்றும் வகையில், நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை இந்த குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை.  1958 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, தனது உற்பத்தியை 1962 ஆம் ஆண்டு தொடங்கி இப்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்து தனது பொன் விழாவினைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.  தற்போது, 15 கூட்டுறவு தொழிற்சாலைகள் நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்த 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளையும் ஓருங்கிணைக்கும் வண்ணம் இண்ட்கோசர்வ் என்ற தலைமை கூட்டுறவு நிறுவனம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், சிறு தேயிலை விவசாயிகளின் பாதுகாவலனாக செயல்பட்டு வருகிறது.  இந்தக் கூட்டுறவு தொழிற் சாலைகள் இயங்குவது, தேயிலைக்கான கூடுதல் விலையை பெறுவதற்குரிய வலுவினை சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு அளித்து வருகிறது. இந்தத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டதிலிருந்து, சிறு, குறு  தேயிலை விவசாயிகள் தேயிலைக்கான நியாயமான விலையை பெற்று வருவதுடன், சுரண்டலிலிருந்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள்.   
தனியார்  தேயிலை ஏல மையங்களில் விற்பனை செய்யப்படும் தேயிலைத் தூளுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை என்பதால், அரசே ஒரு தனி ஏல மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், 2003 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், உலகிலேயே முதன் முறையாக கணினிமயமாக்கப்பட்ட  “டீ சர்வ்”, என்ற புதிய தேயிலை மையத்தை நான் தொடங்கி வைத்தேன். இந்த ஏல மையம், கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 
இது மட்டுமல்லாமல், சிறு தேயிலை விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, “சிறு தேயிலை விவசாயிகள், பாதுகாப்புத் திட்டம்”  என்ற  திட்டம்  2005  ஆம்  ஆண்டு எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.  இந்தத் திட்டத்தின்படி, ஜூலை 2005 முதல் மார்ச் 2006 வரை, ஒரு ஏக்கருக்கு, 4,200 ரூபாய் வீதம் 50,152 சிறு தேயிலை விவசாயிகளுக்கு 28 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது என்பதையும்; தேயிலைத் தொழிற்சாலைகளின் கோரிக்கையை ஏற்று, தேயிலைத் தூள் விற்பனை மீதான மதிப்புக் கூட்டு வரியை 4 விழுக்காட்டில் இருந்து 1 விழுக்காடாக குறைத்து ஆணையிட்டேன் என்பதையும் இந்தத் தருணத்தில் நினைவு கூர விரும்புகிறேன்.          இது மட்டுமல்லாமல், சிறு தேயிலை விவசாயிகள், விலை நிலை நிறுத்துதல் நிதியம் திட்டத்தில் உறுப்பினராகச் சேரவும்; தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற் சாலைகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், புதிய இயந்திரங்களை வாங்கவும் மானியம் வழங்கினேன்.  தற்போது, மூன்றாவது முறையாக முதலமைச்சராக நான் பொறுப்பேற்றவுடன் நீலகிரி மாவட்டத்தில்  இயங்கி வருகின்ற 15 தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினர்களாக உள்ள சிறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோ ஒன்றுக்கு கூடுதலாக 2 ரூபாய் உயர்த்தி வழங்கினேன். இதன் மூலம்,  22,000  விவசாயிகளுக்கு  17  கோடியே  20  லட்சம்  ரூபாய்  கூடுதலாக கிடைத்துள்ளது.  இது தவிர, உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், 15 தொழிற் கூட்டுறவு, தேயிலைத் தொழிற் சாலைகளுக்கு மேம்பாடு  மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்திற்காக,  5 கோடியே 46 லட்சம் ரூபாய் மானியமாக எனது அரசால் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்தத் தருணத்தில் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.   
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற் சாலைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வந்தாலும், இந்த நிறுவனங்களின் விற்பனையைப் பெருக்குவதில் புது யுத்திகளை கையாள வேண்டும்.  என்னைப் பொறுத்த வரையில், நான் புதுமையை விரும்புபவள். அந்த வகையில்,  கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையை அதிகரிக்கும் வகையில்,  “இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்”  என்ற புதிய திட்டத்தினை நடப்பாண்டில் நான் அறிமுகப்படுத்தினேன். 
இத்திட்டம் வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.  இதன் பலனாக, கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 77 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2011-2012 ஆம் ஆண்டில், 220 கோடி ரூபாய்க்கு மேல் சில்லரை வணிகம் செய்து சாதனை படைத்தது. இதே போன்று, இண்ட்கோசர்வ் தொழிற் சாலைகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், புதிய யுத்தியை 2001 ஆம் ஆண்டு, நான் அறிமுகப்படுத்தினேன்.  இதன்படி, சிறு தேயிலை விவசாயிகளின் சுந்தேயிலைக்கு நல்ல விலை கிடைக்கும் வகையிலும்; பொது மக்களுக்கு தரமான தேயிலைத் தூள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையிலும்;  தொழிற் கூட்டுறவு தேயிலைத் தொழிற் சாலைகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும்;  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் “ஊட்டி டீ” விற்பனை செய்யும் திட்டம் என்னால் துவக்கி வைக்கப்பட்டது.  
இந்தத் திட்டத்தின் மூலம், கடந்த 12 ஆண்டுகளில் 317 லட்சம் கிலோ தேயிலைத்தூள் 280 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைத்த லாபத்திலிருந்து, 26 கோடி ரூபாய் இண்ட்கோசர்வ் தொழிற்சாலைகளின்  சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  ஒரு நிறுவனம் மேன்மை அடைய வேண்டும் என்றால்; அதன் விற்பனைத் திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்றால்; வழக்கத்திற்கு மாறாக சிந்திக்க வேண்டும். புதிய சிந்தனைகள் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும். வெற்றியை அளிக்கும்.  
காலணிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று தன்னுடைய காலணிகளுக்கான விற்பனை மையத்தை அமைக்க, ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க கருதியது.  அப்போது, அந்த நிறுவனத்தின், இயக்குநர் குழுமத்தில் உள்ள பெரும்பாலானோர்,  “இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் காலணிகளே போடுவதில்லை; எனவே, இங்கு காலணிகளுக்கான விற்பனை மையத்தை அமைப்பது பயனற்றது” என்று கூறினர். 
ஆனால் ஒருவர் மட்டும்,  “காலணிகளை பயன்படுத்தாத மக்கள் வசிக்கும் இடத்தில் விற்பனை மையத்தை துவங்குவது வியாபாரத்தை பெருக்கச் செய்யும்” என்று கூறினார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் விற்பனை மையம் அமைக்கப்பட்டு, நிறுவனத்தின் வியாபாரம் அதிகரித்தது. இது போன்ற அசாதாரண சிந்தனைகளை கடைபிடித்தால், தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மேன்மை அடையும்.   வியாபாரத்தில் புது யுக்தியுடன் தன்னம்பிக்கையும் சேர்ந்தால் வெற்றி நிச்சயம். 
ஓர் ஊரில் தனியாருக்குச் சொந்தமான வழிபாட்டுத் தலத்தில் மணி அடிக்கும் பணியை ஒருவர் செய்து கொண்டிருந்தார். அந்த வழிபாட்டுத் தலத்தை நிர்வகிப்பவர்கள் கூட்டம் ஒரு நாள் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், வழிபாட்டுத் தலத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.  படிக்காதவர்கள் யாராவது பணிபுரிந்தால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. 
இதனையடுத்து, மணி அடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தவர் உட்பட படிக்காதவர்கள் அனைவரையும் ஆறு மாத காலத்திற்குள் எழுதப் படிக்க கற்றுக் கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்தியது. இருப்பினும், மணி அடிக்கும் பணியை மேற்கொண்டிருந்தவரால், எழுதப் படிக்க கற்றுக் கொள்ள இயலவில்லை. 
இதனையடுத்து, நிர்வாகம் அந்தப் பணியாளரை வேலையை விட்டு அகற்றியது.  அந்தக் கவலையுடன் வீட்டிற்குப் புறப்பட்டவர், தலைவலி காரணமாக, “டீ” சாப்பிட நினைத்தார்.  வழியில்  “டீ” விற்கும் கடை எதுவும் இல்லை.   உடனே அவரது சிந்தனையில் இந்த இடத்தில் சைக்கிளில் “டீ” விற்கும் நடமாடும் டீக்கடை ஒன்றை துவக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.  மறு நாளே அதனைச் செய்தார்.   
இதனையடுத்து, அந்த நபர் தின்பண்டங்கள் விற்கும் கடையை அதே பகுதியில் துவக்கினார். வியாபாரம் பெருகியது. வியாபாரத்தின் மூலம் சம்பாதித்த பணத்தை சேமிக்கும் வகையில் வங்கிக் கணக்கு ஒன்றை துவக்கினார்.  வங்கியில் பணம் நிறைய சேர்ந்தது.  இந்த நபரின் வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருப்பதை அறிந்த வங்கி மேலாளர், அந்த நபரை அழைத்து சேமிப்பு வங்கியில் உள்ள பணத்தை எடுத்து நிரந்தர வைப்புத் தொகைக் கணக்கில் போட்டால் வட்டி அதிகமாக வரும் என்று கூறினார்.  
அதற்கு அந்த நபர் உடனே சம்மதித்தார்.  அதற்கான படிவத்தை வங்கி மேலாளரே பூர்த்தி செய்து கையொப்பம் இடுமாறு அந்த  நபரிடம் கேட்டார்.  அதற்கு அந்த நபர், எனக்கு கையெழுத்திடத் தெரியாது, நான் ஒரு கைநாட்டுப் பேர்வழி என்றார்.  உடனே வங்கி மேலாளர், படிக்காமலேயே இவ்வளவு பணம் சம்பாதிக்கிறாயே? படித்திருந்தால்  நீ என்ன வேலை புரிந்திருப்பாய்? என்று அந்த நபரிடம் வினவினார். அதற்கு அந்த நபர், படித்திருந்தால் வழிபாட்டுத் தலத்தில் மணி அடித்துக் கொண்டிருப்பேன் என்றார்.  இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு படிப்பு மட்டும் இருந்தால் போதாது; கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும் தேவை. நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் அறிவும், திறமையும் தேவை.  
சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் நீங்கள் எல்லாம் உழைப்பால் உயர்ந்தவர்கள். உழைப்பு மட்டுமே ஒருவரை உயர்த்த முடியும் என்பதற்கு இலக்கணமாக, நீங்கள் திகழ்கிறீர்கள்.  உழைப்பின் உன்னதத்தை உணர்த்த ஒரு சிறிய கதையை எடுத்துரைக்க விரும்புகிறேன்.  
ஓர் ஊரில் மிகப் பெரிய பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார்.  நாட்டிலேயே, தான் ஒருவர் மட்டுமே சுகபோகத்தை ஏராளமாக அனுபவிப்பதாக அந்தப் பணக்காரருக்கு நினைப்பு.  ஒரு நாள் அந்தப் பணக்காரரைத் தேடி  ஒரு துறவி வந்தார். அந்தத் துறவியை அந்தப் பணக்காரர் வணங்கி உபசரித்தார்.  பின்னர் அந்தத் துறவியைப் பார்த்து,  “உலகம் முழுவதும் சுற்றிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறது.  என்னைவிட  சுகத்தை அனுபவிக்கிறவர்களை தாங்கள் பார்த்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார் அந்தப் பணக்காரர்.  இலேசாகப் புன்னகைத்த துறவி,  “உன்னைவிட சுகமாக வாழ்கிறவரை வேறு எங்கும் தேட வேண்டாம்.  அவர்  உங்கள் நாட்டிலேயே இருக்கிறார்” என்று அந்தப் பணக்காரரைப் பார்த்துக் கூறினார்.   “என் நாட்டிலா? எங்கே?” என்று கேட்டார் அந்தப் பணக்காரர். “வாருங்கள் நேரிலேயே அவரை நான் காட்டுகிறேன்”, என்றார் துறவி.  பின்னர் அந்தப் பணக்காரரை வயல்வெளிக்கு அழைத்துச்  சென்றார்.  அப்போது கடுமையான கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

          அப்போது, அந்த வெய்யில் பற்றிய கவலையே இல்லாமல், வியர்வைக்கு அஞ்சாது, அறுபது வயது மதிக்கத்தக்க பெரியவர்  ஓர்  இளைஞனைப்  போல்  உழவுப் பணியை மேற்கொண்டு இருந்தார்.  அந்தப் பெரியவரை சுட்டிக்காட்டி, “உன்னை விட சுகம் அனுபவிக்கும் சுகபோகி”,என்று பணக்காரரிடத்தில் கூறினார் அந்தத் துறவி.  “இந்தக் கிழவன் என்னைவிட சுகபோகியா? கேலி வேண்டாம்” என்றார், அந்தப் பணக்காரர் துறவியைப் பார்த்து.  துறவி அந்தப் பணக்காரரைப் பார்த்து, மீண்டும் புன்னகைத்தார்.  “செல்வந்தரே, இந்தத் தள்ளாத வயதிலும் அவர் உழைப்பை பாருங்கள்.  கடுமையான உழைப்பு.  வெயிலுக்கு அஞ்சாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறார்.  
இந்த உழைப்பிற்கு பின்னே அவருக்கு நன்றாக பசி எடுக்கும். கூழோ, கஞ்சியோ, எதுவானாலும், அவருக்கு அமிர்தம் தான். மீண்டும் பகல் முழுவதும் உழைப்பார்.  அந்த உழைப்பின் களைப்பில் இரவில் நிம்மதியாக உறங்குவார்.  சுகபோகம் என்பது, வெயிலையும், பனியையும், புயலையும், மழையையும் ஆனந்தமாய் எதிர்கொள்ளக் கூடியது.  அதை எதிர்கொள்ள, அவர் எப்போதும் தயார்.  உழைப்புக்கு பின் வரும் உறக்கம் தான் சொர்க்கம்.  உழைக்காமல் வரும் எதுவும் சுகபோகமாகாது.  இப்போது கூறுங்கள் நீங்கள் சுகபோகியா? அல்லது அந்த உழைப்பாளி சுகபோகியா?” என்று பணக்காரரைப் பார்த்து கேட்டார் அந்தப் பெரியவர்.  
உடனே அந்தப் பணக்காரர், அந்தத் துறவியைப் பார்த்து வணங்கினார்.  “என்னை மன்னித்து விடுங்கள், நான் உழைக்கத் தயாராகிவிட்டேன்” என்று கூறினார்.  உழைப்பால் உயர்ந்து விளங்கும் நீங்கள் அனைவரும் ஒன்றுபட்டு, இணைந்து பாடுபட்டால், இந்தக் கூட்டுறவுத் தொழிற்சாலைகள் மேலும் நல்ல வளர்ச்சி அடையும். அதன் மூலம் உங்களின் வாழ்க்கைத் தரமும் உயரும். என்னால் வெளியிடப்பட்ட தொலை நோக்குத் திட்டம் 2023-ல், சிறுதொழில் துறைக்கென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அந்த இலக்கினை தமிழ்நாடு எய்தும் வகையில், லட்சியத்துடனும், ஆர்வத்துடனும், விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் நீங்கள் பாடுபட வேண்டும். உங்களால் முடியாதது எதுவுமில்லை.   “நம்மால் முடியும்” என்ற தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், ஒற்றுமையுடனும் பணிகளை மேற்கொண்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம், என்பதைத் தெரிவித்துக் கொண்டு,     தொழில்கள் வளர வேண்டும், தொழிலாளர்கள் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டிற்கிணங்க செயல்பட்டுக் கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசின் நடவடிக்கைகளுக்கு, தேயிலை விவசாயிகளாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, உங்களுக்குத் தேவையான அனைத்து          உதவிகளையும் செய்து தர எனது தலைமையிலான அரசு என்றென்றும் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய தருணத்தில், குந்தா தொழிற் கூட்டுறவு, தேயிலைத் தொழிற் சாலையில், பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, பொன் விழா ஊக்கத் தொகையாக, ஒரு மாத சம்பளம்,  அதிகபட்சமாக 3,000 ரூபாயும், மற்றும் பணியாளர்களுக்கு  15 நாட்கள் சம்பளம், அதிகபட்சம் 10,000 ரூபாயும்,  வழங்கப்படும்.  நீலகிரி மாவட்டம், நஞ்சநாடு பகுதியில் வாழும், சிறு தேயிலை விவசாயிகளின்  வசதிக்காக, நஞ்சநாடு பகுதியில், சுமார் 5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் ஒரு புதிய தொழிற் கூட்டுறவு, தேயிலைத் தொழிற்சாலை, தொடங்கப்படும்.  
நீலகிரி மாவட்டத்தின், தேயிலைத் தொழில் வளர்ச்சியை, மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு, கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுபாளையம் அருகில், 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தேயிலைக் குழுமப் பொது வசதி மையம்,  புதியதாக அமைக்கப்படும். இதில், பொது வசதி மையங்களாக, சேமிப்புக் கிடங்கு, தேயிலைத் தூள் கலத்தல்,   சோதனைக் கூடம் மற்றும், சந்தை மையம், ஆகியவைகள் ஏற்படுத்தப்படும். இந்த குந்தா தொழிற் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வெற்றிப் பாதையில் தொடர்ந்து பயணித்து, வைர விழா, பவள விழா, நூற்றாண்டு விழா என பல சாதனைகளை புரிய வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.

-ஆ.வேல்முருகன்

 

Leave a Reply