சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டத்திற்குட்பட்ட கொண்டையுனூர், வேலூர் கிராமங்களை சேர்ந்த எஸ்டேட் தொழிலாளர்கள் 20 பேர், கர்நாடாகாவில் உள்ள கொட்டபெட்டா எஸ்டேட்டில் வேலை செய்து வந்தனர். கொரோனா ஊரடங்கில் இவர்கள் அங்கேயே சிக்கியுள்ளனர்.
பின்னர் இவர்கள் எஸ்டேட் மூலமாக இ–பாஸ் விண்ணப்பிக்கப்பட்டு, அனுமதி கிடைத்த பின்னர், ஜூஜூவாடியில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருஷ்ணகிரியில் மற்றொருமுறை சோதனை செய்யப்பட்டு சேலம் வந்தடைந்தனர்.
சேலம் கருப்பூர் பொறியியல் கல்லூரியில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, பொன்னம்மாப்பேட்டை கைத்தறி தொழில்நுட்ப கல்லூரியில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
சோதனையில் இவர்களில் யாருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர், ஏற்காட்டிற்கு அரசு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்காட்டின் நுழைவு பகுதியில், வட்டாட்சியர் ரமணி, மருத்துவ அலுவலர் தாம்சன் ஆகியோர் எஸ்டேட் தொழிலாளர்களை பரிசோதித்து பின்னர் வேலூர், கொண்டையுனூர் கிராமங்களுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கபசுர குடிநீர் பொடி, விட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும், அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதாரத் துறையினர் மூலம், மேலும் ஒரு முறை அவர்களை பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக வட்டாட்சியர் ரமணி கூறினார்.
-நே.நவீன் குமார்.
