திருச்சி, துவாக்குடி அருகே தனியார் கம்பெனியின் காவலாளி (செக்யூரிட்டி) ஒருவர் மர்மமான முறையில் மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மணப்பாறை அருகே உள்ள ரெட்டியார்பட்டி சேர்ந்தவர் முக்காரபிள்ளை இவரது மகன் கருப்பையா (வயது 50) இவர் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக உள்ளார்.
இந்நிலையில் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பகுதியில் சிப்காட்டில் ஒருவருடமாக மூடிக்கிடக்கும் கம்பெனியில் இரண்டு நாட்களாக செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற துவாக்குடி போலீசார், கருப்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் செக்யூரிட்டிகளுக்குள் ஏற்பட்ட மோதல்தான் கொலைக்கான காரணம் என்று துவாக்குடி போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் சம்பவ இடத்தை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாக உல் ஹக் நேரில் பார்வையிட்டார்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து. தஞ்சை மாவட்டம் மாரனேரியை சேர்ந்த தர்மர் மகன் ராஜாராம் (வயது 35) என்பவரை பிடித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-ஆர்.சிராசுதீன்.
