கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மாநகராட்சி ஊழியர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை பிடித்து கொன்றனர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 2½ லட்சம் தெருநாய்களை பிடித்து கொல்ல அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சட்டத்துக்கு உட்பட்டு நாய்களை கொல்லலாம் என தீர்ப்பு அளித்தது.
இதற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இந்திய பிராணிகள் நலவாரியம் (ANIMAL WELFARE BOARD OF INDIA) தங்களை இணைத்து கொண்டது. இந்திய பிராணிகள் நலவாரியத்தை எதிர்த்து, PEOPLE FOR ELIMINATION OF STRAY TROUBLES என்ற அமைப்பின் சார்பில் வழக்கில் வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு 18.11.2015 அன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.
அதில், நாய்களின் வாழ்நாளை விட, மனித உயிர்களே மேலானது. பிராணிகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் பிறப்பு கட்டுப்பாடு விதிகளின் கீழ் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்கள், வெறி நாய்கள் மற்றும் நோய் வாய்ப்பட்ட நாய்களை கொல்ல தடை இல்லை என தீர்ப்பு அளித்தனர்.
மேலும், அனைத்து உயர் நீதிமன்றங்களும் பிராணிகள் நல பாதுகாப்பு தொடர்பான விதிகள் குறித்து எவ்வித உத்தரவும் வழங்க வேண்டாம் எனவும், தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கை அடுத்த ஆண்டு (2016) மார்ச் 09-ந் தேதிக்கு நீதிபதிகள் பட்டியலிட்டுள்ளனர்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
