பசுமைப் பொருளாதாரம் ‘பசுமை வேலைவாய்ப்புகள்’ மற்றும் ‘பசுமை தொழில்முனைவு’ ஆகியவற்றுக்கான புதிய வழிகளை உருவாக்கும், இந்தியாவின் நிலைத்தன்மை சார்ந்த வளர்ச்சியில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்: டாக்டர் ஜிதேந்திர சிங்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மின்சார வாகனப் போக்குவரத்து, பசுமை எரிபொருட்கள் மற்றும் வட்டப் பொருளாதாரம் போன்ற துறைகள் இளைஞர்களுக்குப் பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதால், ‘பசுமை வேலைகள்’ மற்றும் ‘பசுமை தொழில்முனைவு’ ஆகியவை எதிர்காலத்தின் பசுமைப் பொருளாதாரத்தின் வரையறுக்கும் உந்து சக்தியாக அமையவிருக்கின்றன என்று கூறினார்.

இந்த மாற்றம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, நிலையான மற்றும் குறைந்த கார்பன் வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் நகர்வையும் துரிதப்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.

புவி தினத்தை முன்னிட்டு புது தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் நடைபெற்ற, “21 ஆம் நூற்றாண்டில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை: அறிவியல், சமூகம் மற்றும் தீர்வுகள்” என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டின் நிறைவு அமர்வில் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். இந்த அமர்வில் துணைவேந்தர் பேராசிரியர் மஸ்ஹர் ஆசிஃப், பதிவாளர் பேராசிரியர் முகமது மெஹ்தாப் ஆலம் ரிஸ்வி, சிறப்பு விருந்தினர் பேராசிரியர் டி.பி. சிங் ஆகியோருடன் பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இந்தியாவின் வளர்ந்து வரும் பசுமைச் சூழலைக் குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், ₹19,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் போன்ற முன்னெடுப்புகள், தூய்மையான தொழில்துறை மாற்றத்திற்கு அடித்தளமிடுவதாகக் கூறினார். மேலும், எஃகு மற்றும் சிமெண்ட் போன்ற முக்கியத் துறைகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உதவுவதாகவும், இது உலகளாவிய பசுமை மாற்றத்தில் இந்தியாவை முன்னணியில் நிலைநிறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப மாற்றத்தின் வேகம் அதிகமாக இருப்பதால், இன்று கற்பனை செய்யப்படும் தீர்வுகள் விரைவாக உருவாகக்கூடும் என்றும், எனவே தொடர்ச்சியாகப் புதுமைகளைப் புகுத்துவது அவசியம் என்றும் அமைச்சர் கூறினார். மின்சார வாகனத் துறையிலிருந்து உதாரணங்களைக் குறிப்பிட்ட அவர், வழக்கமான வாகனங்கள் மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டு, நிலைத்தன்மையை மலிவானதாகவும் விரிவுபடுத்தக்கூடியதாகவும் மாற்றும் செலவு குறைந்த அடித்தளப் புத்தாக்கங்களைக் குறிப்பிட்டார்.

புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதைச் சுட்டிக்காட்டி, சூரியசக்தி உற்பத்தி, மின்கல உற்பத்தி, மின்கட்டமைப்பு மேலாண்மை மற்றும் உயிரி எரிபொருட்கள் ஆகிய துறைகளில் வரும் ஆண்டுகளில் பசுமை வேலைவாய்ப்புகள் விரிவடையும் என்று அமைச்சர் கூறினார். மேலும், பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை உயிரி எரிபொருளாக மாற்றுவது உள்ளிட்ட வட்டப் பொருளாதாரமானது, தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய துறையாக விளங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் பரந்த கடற்கரை இருந்தபோதிலும், பெருமளவில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கடல் ஆற்றல் போன்ற புதிய துறைகளின் மீதும் டாக்டர் ஜிதேந்திர சிங் கவனத்தை ஈர்த்தார். மேலும், இது வரும் ஆண்டுகளில் சூரிய மற்றும் காற்றாலை ஆற்றலுக்குத் துணையாக அமையும் என்றும் கூறினார்.

எரிசக்திப் பாதுகாப்பு முன்னணியில், இந்தியா நீண்டகால இலக்குகளுடன் அதிக அணுசக்தித் திறனை நோக்கி முன்னேறி வருவதாகவும், அதே நேரத்தில் புத்தாக்கம் மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற மூலோபாயத் துறைகளில் தனியார் துறையின் அதிகப் பங்களிப்பைச் சாத்தியமாக்கி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

₹1 லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க (RDI) நிதியைக் குறிப்பிட்டுப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், அரசு மற்றும் தனியார் பங்குதாரர்களுக்கு இடையேயான ஒரு கூட்டு நிதி மாதிரியின் மூலம், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் தங்கள் யோசனைகளை விரிவுபடுத்துவதற்கு ஆதரவளிப்பதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

இந்தியாவின் உலகளாவிய பொறுப்பை வலியுறுத்திப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், 140 கோடி மக்கள்தொகையுடன், பருவநிலை மாற்றங்களை முன்னெடுப்பதில் இந்தியாவுக்கு ஒரு முக்கியப் பங்கு உள்ளது என்றார். பிரதமர் நரேந்திர மோடியால் முன்மொழியப்பட்ட “சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை (LiFE)” என்ற தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன், உலகளாவிய பசுமை மாற்றத்திற்குத் தலைமை தாங்குவதற்கு இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் புத்தாக்கம், தகவமைக்கும் திறன் மற்றும் தகவலறிந்த தேர்வுகள் ஆகியவற்றால் எதிர்காலம் வடிவமைக்கப்படும் என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், நிலைத்தன்மையில் உருவாகி வரும் வாய்ப்புகளில் மாணவர்களும் இளம் ஆராய்ச்சியாளர்களும் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும் ஊக்குவித்தார்.

Leave a Reply