இந்தியாவும் பூட்டானும் தங்களது 7வது கூட்டுச் சுங்கக் குழு (JGC) கூட்டத்தை 2026 ஏப்ரல் 20-21 தேதிகளில் கேரளாவின் மூணாரில் நடத்துகின்றன.

இந்தியா மற்றும் பூட்டான் இடையேயான 7 வது கூட்டுச் சுங்கக் குழு (JGC) கூட்டம், 2026 ஏப்ரல் 20-21 தேதிகளில் கேரளாவின் மூணாரில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு , இந்திய அரசின் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) சிறப்புச் செயலாளர் மற்றும் உறுப்பினர் (சுங்கம்) திரு. யோகேந்திர கார்க் அவர்களும், பூட்டான் அரச நிதியமைச்சகத்தின் வருவாய் மற்றும் சுங்கத் துறையின் தலைமை இயக்குநர் திரு. சோனம் ஜம்த்ஷோ அவர்களும் இணைத் தலைமை வகித்தனர்.

இந்தியாவும் பூட்டானும் நெருக்கமான மற்றும் நீண்டகால வர்த்தக உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. பூட்டானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா திகழ்கிறது, மேலும் பூட்டானின் மொத்த வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 80% இந்தியாவிற்கே நடைபெறுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம், 2024-25 நிதியாண்டில் 1.9 பில்லியன் டாலரைத் தாண்டியது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 46% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இருதரப்பு ஈடுபாட்டிற்கான நிறுவனக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக, சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதி மற்றும் எல்லை மேலாண்மை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு JGC கூட்டங்கள் ஒரு முக்கிய தளமாகச் செயல்படுகின்றன. பூட்டானின் நிலத்தால் சூழப்பட்ட புவியியலைக் கருத்தில் கொண்டு, தரைவழி சுங்க நிலையங்கள் மூலமான வர்த்தகம் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. தற்போது, ​​இந்தியா-பூட்டான் எல்லையில் மேற்கு வங்காளம் (6) மற்றும் அசாம் (4) மாநிலங்களில் 10 அறிவிக்கப்பட்ட தரைவழி சுங்க நிலையங்கள் அமைந்துள்ளன.

கூட்டத்தின் போது, ​​ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை (CBM); சரக்குகள் வருவதற்கு முன் சுங்கத் தரவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU); புலனாய்வுத் தகவல்களைப் பகிர்தல் மற்றும் அமலாக்க ஒத்துழைப்பு மூலம் கடத்தல் தடுப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல்; சுங்க செயல்முறைகளை டிஜிட்டல் மயமாக்குதல்; மற்றும் மின்னணு சரக்கு கண்காணிப்பு அமைப்பின் (ECTS) கீழ் இடைவழி சரக்கு போக்குவரத்தை எளிதாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமைப் பகுதிகள் குறித்து இரு தரப்பினரும் விரிவாக விவாதித்தனர். மேலும், எல்லை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வர்த்தகத்தை எளிதாக்குவதை மேம்படுத்துதல் மற்றும் சுங்க நடைமுறைகளை ஒருங்கிணைத்து நெறிப்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

பூட்டான் தூதுக்குழுவினர் கொச்சி துறைமுகத்தையும் பார்வையிட்டனர். கப்பல்களை நங்கூரமிடுதல் மற்றும் கேன்ட்ரி கிரேன்களைப் பயன்படுத்தி கொள்கலன்களைக் கையாளும் செயல்பாடுகள் உள்ளிட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகள் குறித்த ஒரு கண்ணோட்டம் அத்தூதுக்குழுவினருக்கு வழங்கப்பட்டது. கடல் ரோந்து, சந்தேகத்திற்கிடமான கப்பல்களை அடையாளம் காணுதல், சோதனை நடவடிக்கைகள், ரோந்துப் பணிகளின் போது பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) போன்ற தகவல் தொடர்பு அமைப்புகள், சந்தேகத்திற்கிடமான சரக்குகளை அடையாளம் காணும் முறைகள் மற்றும் அவற்றை ஆய்வு செய்வதற்கான நடைமுறைகள் போன்ற கடல்சார் அமலாக்கத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து பூட்டான் பிரதிநிதிகளுக்கு விளக்கப்பட்டது.

வர்த்தகம், வணிகம் மற்றும் போக்குவரத்து மீதான ஒப்பந்தத்தின் கட்டமைப்பின் கீழ், சுங்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், தடையற்ற எல்லை தாண்டிய வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும், பாதுகாப்பான மற்றும் திறமையான எல்லை நிர்வாகத்தை உறுதி செய்வதற்கும் இரு தரப்பினரும் தங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதன் மூலம், இக்கூட்டம் ஒரு நேர்மறையான குறிப்புடன் நிறைவடைந்தது.

Leave a Reply