இந்திய மக்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் – ஈரானில் ஏற்கனவே உள்ளவர்கள் இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் தரைவழி எல்லைப் பாதைகள் வழியாக வெளியேற்றம்.

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய மக்களுக்கான ஆதரவு ஆகியவை தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்:

*நாடு முழுவதும் பெட்ரோலியப் பொருட்கள், எல்பிஜி தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  • பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசலை பீதியுடன் வாங்குவதையும், எல்பிஜியைத் தேவையில்லாமல் முன்பதிவு செய்வதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • மக்கள் வதந்திகளை நம்பாமல், சரியான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே சார்ந்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு, பொதுமக்கள் டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்துமாறும், அவசியமின்றி எல்பிஜி விநியோகஸ்தர்களை நேரில் சந்திப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • இயன்ற இடங்களில் எல்லாம் பிஎன்ஜி, இன்டக்ஷன், மின்சார அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • எல்பிஜி தேவையின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக, மண்ணெண்ணெய், நிலக்கரி போன்ற மாற்று எரிபொருள் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • சிறு, நடுத்தர, இதர நுகர்வோருக்கு நிலக்கரியை விநியோகிப்பதற்காக, மாநிலங்களுக்கு அதிக அளவில் நிலக்கரியை ஒதுக்கீடு செய்யுமாறு கோல் இந்தியா மற்றும் சிங்கரேனி நிலக்கரி நிறுவனங்களுக்கு நிலக்கரி அமைச்சகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
  • வீட்டு உபயோக, வணிக நுகர்வோர் இருவருக்கும் புதிய பிஎன்ஜி இணைப்புகளை எளிதாக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • எரிபொருள் விநியோக நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்களுடன் (உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல்) பெட்ரோலிய அமைச்சகத்தின் செயலாளர் ஒரு கூட்டத்தை அண்மையில் நடத்தினார். போதுமான அளவு எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார்.
  • பதுக்கல், திசைதிருப்பல், தவறான தகவல்களுக்கு எதிராகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ளும் அதே வேளையில், குறிப்பாக வீட்டு உபயோக மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக எல்பிஜி விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • எல்பிஜி பதுக்கல், கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. நேற்று (24.04.2026), நாடு முழுவதும் 2400-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.

*பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் திடீர் ஆய்வுகளைத் தீவிரப்படுத்தி, நேற்று (24.04.2026) வரை 309 எல்பிஜி விநியோக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளன. 70 விநியோக நிறுவனங்களை இடைநீக்கம் செய்துள்ளன.

  • இணையதள எல்பிஜி முன்பதிவுகள் சுமார் 99 சதவீதமாக அதிகரித்துள்ளன.
  • திசை திருப்பப்படுவதைத் தடுப்பதற்காக, விநியோக அங்கீகாரக் குறியீட்டு (DAC) அடிப்படையிலான விநியோகங்கள் 94.5% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • 2026 ஏப்ரல் 1 முதல், 18.63 லட்சத்திற்கும் அதிகமான 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
  • ஏப்ரல 3-ம் தேதி முதல் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள், 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் தொடர்பாக சுமார் 8700 விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்துள்ளன. அவற்றில் 1,38,000 – க்கும் மேற்பட்ட 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
  • நேற்று (24.04.2026) ஒரே நாளில் 230 முகாம்களில் 5,717 ஐந்து கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டன.
  • ஐஓசிஎல், ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழு, வணிக ரீதியான எல்பிஜி விநியோகத்தைத் திட்டமிடுவதற்காக மாநில அதிகார அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
  • உர ஆலைகளுக்கான ஒட்டுமொத்த எரிவாயு ஒதுக்கீடு, அவற்றின் ஆறு மாத சராசரி நுகர்வில் ஏறத்தாழ 95 சதவீதத்தை எட்டும் வகையில், 09.04.2026 முதல் மேலும் 5% அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 2026 மார்ச் முதல், சுமார் 5.36 லட்சம் பிஎன்ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக சுமார் 6.07 லட்சம் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்புகளுக்காகப் பதிவு செய்துள்ளனர்.
  • நேற்று (24.04.2026) வரை, 42,280- க்கும் மேற்பட்ட பிஎன்ஜி நுகர்வோர் MYPNGD.in இணையதளம் வழியாகத் தங்களது எல்பிஜி இணைப்புகளைத் திரும்ப ஒப்படைத்துள்ளனர்.
  • அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்புடன் உயர் திறனில் இயங்கி வருகின்றன. அதேவேளையில் போதுமான பெட்ரோல், டீசல் கையிருப்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • உள்நாட்டுச் சந்தைக்குப் பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்களின் (petrochemical feedstock) விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அமைச்சகங்களுக்கு இடையிலான ஒரு கூட்டுப் பணிக்குழு (JWG) அமைக்கப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்ச அளவிலான சி3 மற்றும் சி4 வகை மூலப்பொருட்களை (streams) வழங்குவதற்கு, பெட்ரோ கெமிக்கல் வளாகங்கள் உட்பட அனைத்து எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • மருந்துத் துறை, பெட்ரோ ரசாயனத் துறை, மற்றும் தொழில் – உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (DPIIT) ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், மருந்து மற்றும் வேதியியல் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, எல்பிஜி தொகுப்பிலிருந்து நாளொன்றுக்கு 1000 மெட்ரிக் டன்கள் அளவிலான மூலப்பொருட்களை வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 2026 ஏப்ரல் 09 முதல், மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை மற்றும் மதுரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், 7000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான ‘புரோப்பிலீன்’ (propylene) மூலப்பொருளை வேதியியல் மற்றும் மருந்துத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளன.
  • வீட்டு உபயோக நுகர்வுக்கு ஆதரவளிக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையங்களில் வீட்டு உபயோக எல்பிஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • நாடு முழுவதும் எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.
  • மத்திய கிழக்கு நெருக்கடியால் கச்சா எண்ணெய் விலையில் அசாதாரணமான உயர்வு ஏற்பட்டுள்ளது; இருப்பினும், நுகர்வோரைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 குறைத்துள்ளது.
  • சில்லறை விற்பனை நிலையங்களில் பெட்ரோல், டீசல் விலைகள் எந்த உயர்வுமின்றி மாற்றமின்றி உள்ளன.
  • வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதுடன், செய்தியாளர் சந்திப்புகள் மூலம் துல்லியமான தகவல்களை வழங்குமாறு மாநில அரசுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.
  • மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழக்கமான ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக 48,000 கிலோலிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
  • கப்பல் போக்குவரத்து தொடர்பான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கி வருகிறது. அது செயல்படுத்தப்பட்டதிலிருந்து 7553 அழைப்புகளையும் 16,033 மின்னஞ்சல்களையும் கையாண்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 150 அழைப்புகளும் 394 மின்னஞ்சல்களும் பெறப்பட்டுள்ளன.
  • கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் இதுவரை 2,729 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்புவதற்கு வழிவகுத்துள்ளது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் 49 பேர் வந்துள்ளனர்.
  • இந்தியா முழுவதும் துறைமுகச் செயல்பாடுகள் இயல்பாக உள்ளன.
  • மாலுமிகளின் நலனையும், தடையற்ற கடல்சார் செயல்பாடுகளையும் உறுதி செய்வதற்காக, கப்பல் போக்குவரத்து அமைச்சகமானது, வெளியுறவு அமைச்சகம், இந்தியத் தூதரகங்கள், கடல்சார் பங்குதாரர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
  • மத்திய கிழக்குப் பகுதி முழுவதும், உள்ள இந்தியத் தூதரகங்களும் அலுவலகங்களும் இந்திய சமூகத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதுடன், அவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்விற்காகத் தேவையான உதவிகளையும் அறிவுரைகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.
  • வான்வெளி திறந்திருக்கும் நாடுகளில் இருந்து விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. 2026 பிப்ரவரி 28 முதல், இப்பகுதியிலிருந்து இந்தியாவிற்கு சுமார் 10,97,000 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
  • இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே குறைந்த அளவிலான விமான சேவைகள் தொடர்ந்து இயக்கி வருகின்றன. இன்று (25.04.2026) 110 சேவைகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • சவுதி அரேபியா, ஓமன் ஆகிய பகுதிகளில் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
  • கத்தார் வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டுள்ள நிலையில், கத்தார் ஏர்வேஸ் இந்தியாவிற்கு விமானங்களை இயக்குகிறது.
  • குவைத் வான்வெளி திறக்கப்பட்டுள்ளது. குவைத்திலிருந்து இந்தியாவிற்கு வரையறுக்கப்பட்ட விமானச் சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்கவிருப்பதாக ஜசீரா ஏர்வேஸ், குவைத் ஏர்வேஸ் ஆகியவை அறிவித்துள்ளன. சவுதி அரேபியாவின் தம்மாம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு, திட்டமிடப்படாத வணிக விமானச் சேவைகளை அவை தொடர்ந்து இயக்கி வருகின்றன.
  • பஹ்ரைன் வான்வெளி திறக்கப்பட்டுள்ளது. கல்ஃப் ஏர் விமான நிறுவனம், பஹ்ரைனிலிருந்து இந்தியாவிற்கு வரையறுக்கப்பட்ட விமானச் சேவைகளை இயக்கி வருகிறது.
  • ஈரானிய வான்வெளி பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஏற்கனவே ஈரானில் இருப்பவர்கள், நமது தூதரகத்தின் உதவியுடன் தரைவழி எல்லைப் பாதைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். இதுவரை, தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், 2,443 இந்தியர்கள் தரைவழி எல்லைப் பாதைகள் வழியாக ஈரானிலிருந்து வெளியேறுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளது.
  • இஸ்ரேலிய வான்வெளி பகுதி அளவு திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து இந்தியக் மக்களின் இந்தியப் பயணத்திற்கான வசதிகள் ஜோர்டான் மற்றும் எகிப்து வழியாகத் தொடர்ந்து செய்யப்படுகின்றன.
  • ஈராக் வான்வெளி, திறக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் இந்தியா வருவதற்கான வசதிகள், ஜோர்டான், சவுதி அரேபியா வழியாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply