வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மேம்பட்ட கவச வாகனங்கள் (தண்டவாள மற்றும் சக்கர வாகனங்கள்), பாதுகாப்புத் துறை (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) செயலாளர் மற்றும் டி.ஆர்.டி.ஓ. தலைவர் டாக்டர் சமீர் வி காமத் அவர்களால், மகாராஷ்டிராவின் அகில்யநகரில் உள்ள டி.ஆர்.டி.ஓ. ஆய்வக வளாகத்தில் ஏப்ரல் 25, 2026 அன்று வெளியிடப்பட்டன. பாதுகாப்புப் படைகளின் வளர்ந்து வரும் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு தளங்களும், இயக்கம், தாக்குதல் திறன் மற்றும் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மேம்பட்ட அம்சங்களுடன், உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட 30 மிமீ ஆளில்லா சுழல் பீரங்கியுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. உயர் சக்தி எஞ்சின் மற்றும் தானியங்கி கியர் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தளங்கள், அதிக சக்தி-எடை விகிதம், அதிவேகத் திறன்கள், சரிவு மற்றும் தடைகளைக் கடக்கும் திறன், STANAG நிலை 4 மற்றும் 5 பாதுகாப்புடன், முழுமையான மாடுலர் வெடிப்பு மற்றும் எறிபொருள் பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஹைட்ரோ ஜெட்களை இணைப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட நீர் தடைகளைக் கடக்கும் திறனைக் கொண்ட நீர்நில வாழ் அமைப்பு, செயல்பாட்டு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
30 மிமீ ஆளில்லா சுழல் கோபுரமும், 7.62 மிமீ PKT துப்பாக்கியும், டாங்கெதிர்ப்பு வழிகாட்டு ஏவுகணைகளைச் செலுத்தும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படை வடிவமைப்பானது, பலதரப்பட்ட பணிகளுக்காகக் கட்டமைக்கப்படும் திறன்களைக் கொண்டுள்ளது. இதில் உள்நாட்டுப் பொருட்களின் பயன்பாடு சுமார் 65% ஆக உள்ளது, இதை 90% ஆக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தளங்களின் உற்பத்தியானது, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் ஃபோர்ஜ் லிமிடெட் ஆகிய இரண்டு தொழில் கூட்டாளர்களால், பல குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுறவானது, வளர்ந்து வரும் பாதுகாப்புச் சூழலமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், ஆயுத மற்றும் போர் பொறியியல் அமைப்புகள் (ACE); உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகள் தொடர்பு (PC&SI) ஆகியவற்றின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் மற்றும் தலைமை இயக்குநர்கள்; TASL புனேவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர்; BFL புனேவின் துணைத் தலைவர் மற்றும் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் பிற தொழில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வகம், உயர் ஆற்றல் பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகம், போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (பொறியாளர்கள்) உள்ளிட்ட பல்வேறு DRDO ஆய்வகங்களின் இயக்குநர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.
எம்.பிரபாகரன்
