ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுப்பு: தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு!

தூத்துக்குடியில் பசுமைத் தாமிர ஆலை அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி மறுத்த தமிழக அரசின் நடவடிக்கை மனிதாபிமானமானது – முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வைகோ பாராட்டு!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவும், அதே வளாகத்தில் பசுமைத் தாமிர ஆலை அமைக்கவும் வேதாந்தா குழுமம் முயற்சி செய்து வரும் நிலையில், அதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காத தமிழக அரசின் நடவடிக்கைக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட காலம் முதல் அதற்கு எதிராகத் தான் தொடர்ந்து அறவழிப் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் முன்னெடுத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் 2010 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வேதாந்தா குழுமம் தூத்துக்குடியில் மீண்டும் தொழிற்சாலை அமைக்க முயற்சிப்பது மாவட்டத்தின் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்நிறுவனத்திற்கு எந்தவிதமான வாய்ப்பும் வழங்கக்கூடாது என முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வலியுறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

13 பேர் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்

2018 மே 22 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 வயது சிறுமி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்ததையும், பலர் காயமடைந்ததையும் வைகோ நினைவுகூர்ந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தற்போது அறிவித்திருப்பது மிகுந்த மனிதாபிமானம் கொண்ட நடவடிக்கை என அவர் பாராட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களின் உணர்வுகளுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துயரத்திற்கும் மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply