இத்தாலியில் உள்ள எலெட்ரா சின்க்ரோட்ரோன் ட்ரியேஸ்டே (Elettra Sincrotrone Trieste) ஆராய்ச்சி மையத்தின் நவீனமயமாக்கல் திட்டமான எலெட்ரா 2.0-வில் இந்தியா கூட்டாகப் பங்கேற்கிறது என மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். இதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில், 70 லட்சம் யூரோவுக்கு மேல் முதலீடு செய்ய இந்தியா உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று (2026 நவம்பர் 13) இத்தாலியில் உள்ள இந்த ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார். இந்த முதலீடு நவீன ஆராய்ச்சிக் கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, ஆராய்ச்சியாளர்களின் திறன் வளர்ச்சிக்கும் உதவும் என்று அவர் கூறினார்.
இந்த மேம்பாட்டின் மூலம் வேதியியல், இயற்பியல், மேம்பட்ட பொருட்கள் அறிவியல், கட்டமைப்பு உயிரியல் உள்ளிட்ட துறைகளில் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகள் உருவாகும் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இதன் மூலம் பயன்பெறுவர் என அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே 25 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் ஒத்துழைப்பு நீடிக்கிறது எனவும், இந்திய விஞ்ஞானிகள் 1998 முதல் எலெட்ரா மையத்தில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். இத்தாலிக்கு அடுத்தபடியாக, இந்த மையத்தை அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
திவாஹர்
