ஆற்றை மறித்து தனியார் தடுப்பு சுவர் கட்டியதால் அருகில் இருந்த வீட்டின் உள்ளே மழை நீர் பாய்ந்து வீடு இடிந்தது!

ye1511P1

ஆற்றை மறித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்.

ஆற்றை மறித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்.

ஏற்காடு மஞ்சக்குட்டை கிராமத்தில் உள்ள ஆற்றை மறித்து தனியார் ஒருவர் தடுப்பு சுவர் கட்டியுள்ளார். இதனால் அவ்வழியாக வந்த மழை நீர் அருகில் இருந்த வீட்டின் உள்ளே பாய்ந்து வீடு இடிந்தது. சிறு குழந்தைகளுடன் பெற்றோர் போராடி தப்பித்தனர்.

கடந்த திங்கள் அன்று பெய்த கனமழையினால் ஏற்காடு செல்லும் இரு மலைப்பாதைகளிலும் பெருமளவில் மண்சரிவு ஏற்பட்டது. அது மட்டுமின்றி காக்கம்பாடியை சேர்ந்த சின்னா மற்றும் மஞ்சக்குட்டையை சேர்ந்த முருகேசன் என்பவர்களது வீடுகள் இடிந்ததாக கூறி வருவாய் துறை மூலம் இருவருக்கும் நஷ்ட ஈடாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

வீடு இடிந்து நஷ்ட ஈடு பெற்ற முருகேசன் என்பவரது வீட்டிற்கு அருகில், நீண்ட காலமாக ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அந்த ஆற்றின் அருகில் தனியார் ஒருவர் பிளாட் ஏற்படுத்தியுள்ளார். அப்போது அந்த ஆற்றை மறித்து தடுப்பு சுவர் கட்டி ஆற்றையும் ஆக்கிரமித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்களன்று ஏற்காடு முழுவதும் கனமழை பெய்ததால் அந்த மூடப்பட்ட ஆறு இருந்த இடத்தில் அதிகளவில் தண்ணீர் ஓடியது. அங்கு தடுப்பு சுவர் இருந்ததால், அருகில் இருந்த முருகேசன் என்பவரது வீட்டின் உள்ளே அதிகளவிலான மழை நீர் பாய்ந்து அவரது வீட்டின் சுவர்கள் இடிந்து மழை நீர் வீட்டினுள் பெரும் வெள்ளமாக ஓடியது.

இதில் அவரது வீட்டில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும், முருகேசன் தனது மனைவி சரோஜா, மகன் பிரகாஷ், மருமகள் மற்றும் தனது இரண்டு பேரக்குழந்தைகளுடன் அடைமழையில் போராடி தப்பித்துள்ளார்.

பின்னர் அந்த தடுப்பு சுவரை முருகேசனே தனது உறவினர்களின் உதவியுடன் இடித்து தள்ளியுள்ளார். அப்போது அந்த கிராம உதவியாளர் ராணி மட்டும் கடமைக்காக உடனிருந்துள்ளார். மேலும், விதிகளை மீறி ஆற்றை மறித்து தடுப்பு சுவர் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருகேசன் கோரிக்கை விடுத்தார்.

 இது குறித்து முருகேசன் கூறியதாவது:

” கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னரே இந்த ஆற்றில் அருகில் பிளாட் போட்டவர் தடுப்பு சுவரை கட்டும்போது, கட்டக்கூடாது என கூறினேன். ஆனாலும் அவர் எங்களை மீறி தடுப்பு சுவரை கட்டினார். இப்போது இந்த தடுப்பு சுவறினால் ஆற்றில் ஓட வேண்டிய தண்ணீர் எங்கள் வீட்டினுள் ஓடி விட்டது. இதனால் நாங்கள் பெரும் பாதிப்புள்ளாகியுள்ளோம், இவ்வாறு விதிகளை மீறி தடுப்பு சுவர் கட்டியது தெரிந்தும் வருவாய்துறையினர் கடந்த மூன்று மாதங்களாக கண்டும் காணாமலும் இருந்தனர்.

இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்து பார்வையிட வந்த சேலம் மாவட்ட கலெக்டர் எங்கள் கிராமத்திற்கு வந்த போதிலும் வருவாய் துறையினர் எங்கள் வீட்டை அவரிடம் காண்பிக்க அழைத்து வரவில்லை. எனவே, இவ்வாறு அரசு விதிகளை மீறி தடுப்பு சுவர் கட்டி எங்கள் வீடு பாதிப்புள்ளாகியது காரணமான, இந்த பிளாட்டின் உரிமையாளர் மீது அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு கூறினார்.

இது குறித்து மஞ்சக்குட்டை வருவாய் ஆய்வாளர் நர்மதா கூறியதாவது:

“இவ்வாறு விதிகளை மீறி ஆற்றை மறித்து தடுப்பு சுவர் கட்டியது தவறுதான். பிளாட் உரிமையாளர் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இவ்வாறு ஆற்றை மறித்து தடுப்பு சுவர் கட்டியிருந்தது குறித்து ஏற்காடு வட்டாட்சியர் கிருஷ்ணனிடம் ஏற்கெனவே தகவல் தெரிவித்து விட்டோம். ஆனால், தற்போது அவர் விடுப்பில் உள்ளதால், பொறுப்பு வட்டாட்சியர் பாலாஜியிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்போம் ” இவ்வாறு கூறினார்.                                                                            – நவீன் குமார்.