வேலூர் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி தலைவர் ஜி.ஜி.ரவியை பக்தர் வேடத்தில் சென்று கொலை செய்ய முயற்சித்த பிரபல ரவுடி மகா என்ற மகாலிங்கத்தை, கல்லூரி சேர்மன் மகன்கள் கல்லால் அடித்து கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜி.ஜி.ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். இவர் ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி தலைவர் ஜி.ஜி.ரவியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி மகா என்ற மகாலிங்கத்துக்கும், ஜி.ஜி.ரமேசுக்கும் இடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த பகையே, கொலையில் முடிந்தது.
ரவுடி மகா மீது பல்வேறு கொலை மற்றும் வழிப்பறி வழக்குகளும் இருந்ததால், வேலூர் மற்றும் கடலூர் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜாமீனில் வந்த மகா தலைமறைவானார்.
ஜி.ஜி.ரமேஷ் கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது அண்ணன் ஜி.ஜி.ரவிக்கும், ரவுடி மகாவுக்கும் இடையே இருந்து வந்த பகை மேலும் அதிகமானது.
ரமேசை கொலை செய்தது போல, ரவியையும் போட்டுத்தள்ள ரவுடி மகா திட்டம் போட்டு செயல்பட்டு வந்தார். இதற்காக நேரம் பார்த்து காத்திருந்த மகா, கிருஷ்ண ஜெயந்தி அன்று ரவியை கொலை செய்ய முடிவு செய்தார்.
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் 05.09.2015 அன்று இரவு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி தலைவர் ஜி.ஜி.ரவி வந்திருப்பது மகாவுக்கு தெரியவந்தது.
இதையடுத்து தனது கூட்டாளி குப்பன் மற்றும் 2 பேருடன் காவி உடையில் மகா அங்கு சென்றார். அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஆடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த ரவுடி மகா பக்தர்கள் போல கூட்டத்துக்குள் நின்றபடியே கண்காணித்தார்.
கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து தோட்டப் பாளையத்தில் உள்ள தாரகேஸ்வரர் கோவிலுக்கு ஜி.ஜி.ரவி மற்றும் அவரது ஆட்கள் இரவு 8.40 மணியளவில் வந்தனர். அவரை பின்தொடர்ந்து வந்த மகா, தாரகேஸ்வரர் கோவில் தெருவில் ஜி.ஜி.ரவி தனியாக நடந்து சென்ற போது அவரை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் கழுத்து, முகத்தில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜி.ஜி.ரவியின் ஆட்கள் மகாவை துரத்திக் கொண்டு ஓடினர். அப்போது காட்பாடி சாலையில் பஸ் குறுக்கே வந்ததால் மகாவால் தப்பிக்க முடியவில்லை.
இதனை பயன்படுத்திக் கொண்ட ஜி.ஜி.ரவியின் ஆட்கள் மகாவை சுற்றிவளைத்து நடுரோட்டில் சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மகாவின் தலையில் கல்லூரி சேர்மன் ஜி.ஜி.ரவியின் மகன்கள் பெரிய கல்லை தூக்கி போட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரவுடி மகா துடிதுடித்து பலியானார்.
கொலைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
