மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தியா-சிங்கப்பூர் இடையேயான நீண்டகால பொருளாதாரக் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையிலும், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையிலும், 2026 ஆகஸ்ட் 20 அன்று சிங்கப்பூரில் தொடர்ச்சியான உயர்மட்ட இருதரப்பு மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.
திரு கோயல், இஸ்தானாவில் சிங்கப்பூர் பிரதமர் திரு லாரன்ஸ் வோங்கைச் சந்தித்ததன் மூலம் அன்றைய நாளைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, அவர் ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற 4வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்டத்திலான வட்டமேசை மாநாடு (ISMR) மற்றும் 4வது இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக வட்டமேசை மாநாடு (ISBR) ஆகியவற்றில் பங்கேற்றார். இருதரப்பு பொருளாதார ஈடுபாட்டை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்கவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகளை அடையாளம் காணவும் இந்த வட்டமேசை மாநாடுகள் ஒரு தளத்தை வழங்கின. இந்த வட்டமேசை மாநாடுகளைத் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா நடைபெற்றது.
பிற்பகலில், திரு கோயல் அவர்கள், குளோபல் ஃபைனான்ஸ் & டெக்னாலஜி நெட்வொர்க் (GFTN) மற்றும் கெப்பல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் உள்ளிட்ட உலகளாவிய வணிக மற்றும் நிறுவன சமூகத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் தொடர்ச்சியான அரசு-வணிக (G2B) சந்திப்புகளை நடத்தினார். வேளாண் ஏற்றுமதி, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) அடிப்படையிலான வணிகப் பூங்காக்கள், நிதித் தொழில்நுட்பம் (fintech) மற்றும் நிலையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்தக் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.
திரு கோயல், சிங்கப்பூரின் வெளியுறவு மற்றும் வர்த்தகம் & தொழில்துறை இணை அமைச்சர் திருமதி கான் சியோ ஹுவாங்குடன் இணைந்து, சிட்டி ஸ்கொயர் மாலில் நடைபெற்ற ஏபிஇடிஏ-ஃபேர்பிரைஸ் முன்னெடுப்பையும் பார்வையிட்டார். இந்த சந்திப்பு, இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வளர்ந்து வரும் வேளாண் வர்த்தகத்தையும் விரிவடைந்து வரும் சந்தை இணைப்புகளையும் எடுத்துக்காட்டியது.
மாலையில், திரு கோயல் அவர்கள் INSEAD ஆசிய வளாகத்தில் FICCI அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியா-சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கில் பங்கேற்றார். மேலும், “புதிய உலகளாவிய வளர்ச்சிச் சமன்பாட்டில் இந்தியா: ஆசியா மற்றும் உலக வணிகங்களுக்கான வளர்ச்சியும் வாய்ப்புகளும்” என்ற தலைப்பிலான கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து, வர்த்தக சமூக உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடல் கேள்வி-பதில் அமர்வும் நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தைகள், இந்தியா-சிங்கப்பூர் பொருளாதாரக் கூட்டாண்மையில் உள்ள வலுவான உத்வேகத்தையும், பரஸ்பர நன்மை பயக்கும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே வேளையில், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகளை ஆழப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தின.
4வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசை மாநாட்டில் இந்தியத் தரப்பில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன்; மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர்; மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல்; மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் திரு. ஜிதின் பிரசாதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். சிங்கப்பூர் தரப்பில் துணைப் பிரதமரும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான திரு. கான் கிம் யோங்; சிரேஷ்ட அமைச்சரும், தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், உள்துறை அமைச்சருமான திரு. கே. சண்முகம்; வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்; டிஜிட்டல் மேம்பாடு மற்றும் தகவல் துறை அமைச்சர் செல்வி. ஜோசபின் தியோ; மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரும், நிதித்துறைக்கான இரண்டாம் இணை அமைச்சருமான திரு. ஜெஃப்ரி சியோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
திவாஹர்
