குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்திய வனப் பணி பயிற்சி அதிகாரிகள், ராயல் பூட்டான் வனப் பணி அதிகாரிகளிடையே இன்று உரையாற்றினார்.
பயிற்சி பெற்று வரும் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளில், இந்தியாவில் உள்ள காடுகள், வனவிலங்குகள், பல்லுயிர் பெருக்கம், விலைமதிப்பற்ற இயற்கை வளங்கள் போன்றவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை அவர்கள் ஏற்கவுள்ளதாகக் கூறினார்.
நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும், 2070-ம் ஆண்டிற்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைவதிலும், இந்திய வனப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியும், பாதுகாப்பும் ஒன்றோடொன்று இணைந்து பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்பு, முன்னேற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்வாதாரம், தற்போதைய தேவைகள், எதிர்கால சந்ததியினரின் நலன்கள் ஆகியவற்றுக்கு இடையே, உகந்த சமநிலையைக் கண்டறியுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
தனிப்பட்ட சிறப்பைக் காட்டிலும் குழுவாகச் செயல்படுவதில் சிறந்து விளங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த குடியரசு துணைத்தலைவர், தொடர்ச்சியான கூட்டு முயற்சியே, நாடுகளையும் நிறுவனங்களையும் வடிவமைக்கிறது என்று கூறினார். பல தலைமுறைகளாக காடுகள், இயற்கை சூழல் அமைப்புகளுடன் இணக்கமாக வாழ்ந்து வரும் சமூகங்கள் சேகரித்த பாரம்பரிய அறிவை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, இன்று டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில், உத்தராகண்ட் மாநில ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு), அம்மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிற முக்கிய பிரமுகர்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில், அவர் மேற்கொண்டுள்ள இரண்டு நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்னன், நாளை முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகளிடமும் உரையாற்றுகிறார்.
திவாஹர்
