பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்சுமியும் புதுதில்லியில் 2026 ஆகஸ்ட் 20 அன்று இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.
“புதுதில்லியில் 2026 ஆகஸ்ட் 20 அன்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கும், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்சுமியும் ஜப்பான்-இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் நிலையிலானக் கூட்டத்தை நடத்தினார்கள்.
இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளமை ஆகியவற்றுக்கான முக்கியத் தூண்களில் ஒன்றாக உள்ள “ஜப்பான்-இந்தியா சிறப்பு உத்திசார், உலகளாவிய கூட்டாண்மை”–ன் கீழ் இரு நாடுகளின் அமைச்சகங்கள், பாதுகாப்புத்துறை சேவைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு உட்பட பாதுகாப்புத் துறையில் உள்ள ஒத்துழைப்பு சீராக வலுப்பெறுவதை இருநாட்டு அமைச்சர்களும் வரவேற்றனர்.
இரு நாடுகளின் தலைவர்களும் 2026 ஜூலையில் வெளியிட்ட ஜப்பான்-இந்தியா கூட்டறிக்கையை நினைவுகூர்ந்த இரண்டு அமைச்சர்களும் சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை உருவாக்க தங்கள் தலைமையிலானப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உறுதிபூண்டனர்.
உலக அளவில் பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் பிராந்திய, சர்வதேசப் பாதுகாப்பு சூழல்கள் குறித்த மதிப்பீடுகளை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
கடல்சார் பாதுகாப்புத் துறையில் செயல்பாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்த இரண்டு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
எம்.பிரபாகரன்
