தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினரின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் அரசுப்பணியும், மக்கள் பணியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன,
போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்தது முறையற்றது
தமிழ்நாட்டில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வருவாய் நில அளவை துறைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக நடத்தி வரும் வேலை நிறுத்தப்போராட்டத்தால் வாரிசு சான்றிதழ், நில அளவைப்பணிகள், பட்டா மாறுதல், சொத்து வரி மதிப்பீடு, ஆன்லைன் பட்டா ஏற்றுதல் ஆகிய அத்தியாவசியப் பணிகள் முடங்கியுள்ளன.
அதாவது பட்டா, சிட்டாவுக்கு விண்ணப்பவித்தர்களுக்கு பட்டா சிட்டா கிடைக்காமல், பத்திரப்பதிவு செய்ய முடியாமல், நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய சிட்டா அடங்கல் கிடைக்காமல், கணினி இணையம் வழியாக ஒப்புதல் பெற முடியாமல் சிரமப்படுபவர்கள் ஏராளம்.
இப்படி அரசுப்பணியும், மக்கள் பணியும் பாதிக்கப்படுவதற்கு காரணம் தமிழக அரசு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினரின் நியாயமான கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாதது தான்.
வருவாய்த்துறை அலுவலர்கள் பணியைப் புறக்கணித்திருப்பதால் அரசு அலுவலங்களுக்கு மக்கள் வந்து செல்வதும், அலச்சல் அதிகமாகி, நேரம் காலம் விரயமாகி மக்களுக்கான பணிகள் நடைபெறவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு போராட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இப்போராட்டத்தை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது நியாயமில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்த அடக்குமுறையும் முறையற்றது.
தமிழக அரசின் மெத்தனப்போக்கால் வருவாய்த்துறை அலுவலர்கள் மட்டுமல்ல பொது மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினருடன் உடனடி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
