இந்தியா – போலந்து கூட்டறிக்கை.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், போலந்து பிரதமர் திரு டொனால்ட் டஸ்க், 2026 அக்டோபர் 21 முதல் 23 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்துறைப் பிரதிநிதிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவும் அவருடன் இந்தியா வந்துள்ளது.

இரு தலைவர்களும் மண்டல மற்றும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து, விரிவாக விவாதித்தனர்.

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி, போலந்து நாட்டில் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை இரு தலைவர்களும் நினைவு கூர்ந்தனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் ‘உத்திசார் ஒத்துழைப்பு’ நிலைக்கு உயர்ந்ததுடன், 2024-2028-ம் ஆண்டுகளுக்கான செயல் திட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2026 செப்டம்பரில், வார்சாவில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், போலந்து துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான திரு ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஆகியோர் இந்தச் செயல் திட்டம் குறித்து மேற்கொண்ட மறுஆய்வு முடிவுகளை, இரு நாட்டுப் பிரதமர்களும் அங்கீகரித்தனர்.

போலந்து பிரதமரின் இந்தியப் பயணம், ‘உத்திசார் ஒத்துழைப்பிற்கு’ புதிய உத்வேகத்தை அளித்துள்ளதாக இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதியான, கால வரையறைக்கு உட்பட்ட, பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய வகையில் மாற்றுவதற்கான தங்களின் விருப்பத்தை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.

உயர்நிலையிலான அரசியல் பரிமாற்றங்களையும், நிறுவன ரீதியான பேச்சுவார்த்தைகளையும் விரைவுபடுத்துவது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும், இரு நாடுகளின் நாடாளுமன்றங்கள், மாநில,  பிராந்திய அதிகார அமைப்புகள், சிந்தனைக் குழுக்கள், கொள்கை சார்ந்த நிறுவனங்களுக்கு இடையேயான நெருங்கிய செயல்பாடுகளையும் அவர்கள் ஊக்குவித்தனர்.

2026 ஜனவரி 27 அன்று புதுதில்லியில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாடு, ‘2030-ல், இந்தியா-ஐரோப்பிய யூனியன் கூட்டு உத்திசார் நிகழ்ச்சி நிரல்’, ஐரோப்பிய யூனியன் – இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், புலம்பெயர்வு குறித்த விரிவான ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர். தடையற்ற  வர்த்தக ஒப்பந்தத்தைப் பொறுத்தவரை, வர்த்தகம், முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குதல், முக்கியத்துவம் வாய்ந்த விநியோக நடவடிக்கைகள் பன்முகப்படுத்துதல், வலுப்படுத்துதல், புதிய சந்தை வாய்ப்புக்களை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன், இந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட்டு, அதை அங்கீகரித்து, உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பிற்காக, போலந்து பிரதமர் திரு டொனால்ட் டஸ்க், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்தியா-போலந்து நாடுகளுக்கிடையேயான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், பன்முகப்படுத்தவும், அதிகாரிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகள், வலுவான நிறுவன ஒத்துழைப்பு மூலம் செயல் திட்டத்தை (2024-2028) திறம்படச் செயல்படுத்தவும் இரு தலைவர்களும் தங்களது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

மேலும், போலந்திற்கு வருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, பிரதமர் திரு டொனால்ட் டஸ்க் அழைப்பு விடுத்தார்.

Leave a Reply