பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 அக்டோபர் 25 அன்று உத்தரப் பிரதேசம், ஒடிசா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். காலை 11 மணியளவில், வாரணாசியில் புதிய ஆடை உற்பத்தி நிலையத்தை அவர் தொடங்கி வைக்கிறார். மதியம் 1 மணியளவில், வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெறும் ‘விமானப்படை தின வான்வழி சாகச நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.
பின்னர், ஒடிசா செல்லும் பிரதமர், மாலை 4:45 மணியளவில் புவனேஷ்வரில், ரிசர்வ் வங்கியின் தரவு மையம், சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தைப் பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், ‘அரவிந்த் லிமிடெட்’ நிறுவனத்தின் புதிய ஆடை உற்பத்தி நிலையத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இந்த மையம், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும், அப்பகுதியில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
நவீன உற்பத்தி நடைமுறைகளை மையமாகக் கொண்ட இந்த மையம், குறிப்பாக, பெண்களுக்குப் பயனுள்ள வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும். இது தொழில் முதலீடுகள், உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கான இடமாக உத்தரப் பிரதேச மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருவதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. உலகளவில், வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட இந்த நிறுவனம், வாரணாசியில் தயாரிக்கப்படும் பொருட்கள் உலகம் முழுவதும் சென்றடைவதை உறுதி செய்கிறது. இது பெரும்பாலும் பெண்களால் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாக இருப்பதால், ‘பெண்கள் தலைமையிலான வளர்ச்சி’ என்பதற்கு ஒரு வலுவான அடையாளமாகத் திகழ்கிறது.
வாரணாசியில் உள்ள நமோ காட் பகுதியில் நடைபெறும் ‘விமானப்படை தின வான்வழி சாகச நிகழ்ச்சியை பிரதமர் நேரில் பார்வையிடுகிறார். இந்திய விமானப்படையின், 94-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், ‘கங்கை நதியின் மேல் சிறகுகள்’ என்ற கருப்பொருளில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த வான்வழி சாகசக் காட்சியில் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் ‘பிரசந்த்’, சுகோய்-30 எம்.கே.ஐ மற்றும் ரஃபேல் போன்ற போர் விமானங்களும், இந்திய விமானப்படையின் போக்குவரத்து விமானங்களும் இடம் பெறுகின்றன. இந்தியக் கடற்படை, இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான விமானங்களும் இதில் பங்கேற்பதன் மூலம், முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வெளிப்படுத்தவுள்ளன. இந்திய விமானப்படையின் முதன்மையான சாகசக் குழுக்களான ‘சூர்ய கிரண்’ மற்றும் ‘சாரங்’ ஹெலிகாப்டர் குழுக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றன. இந்த வான்வழி சாகசக் காட்சி, துல்லியமான பறக்கும் திறன், ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டுச் சிறப்பை பறைசாற்றும் வகையில் அமையும். இந்தியாவின் நிதி அமைப்பின் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக, புவனேஸ்வரில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய தரவு மையம், சைபர் பாதுகாப்பு பயிற்சி நிறுவனத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
திவாஹர்
